04 December 2016

பாஞ்சாலி சபதம் சுப்பிரமணிய பாரதி

பழைய பாரதக் கதையின் சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுத்துச் செவ்வியல் காப்பியமாகப் படைத்துள்ளார் சுப்பிரமணிய பாரதி. பாஞ்சாலி சபதம் என்ற அவரது படைப்பில் அழகியல், குறியீட்டியல், குமுகாயவியல் யாவும் அமைந்து கிடப்பதைக் காணலாம்.

‘’மாடிழந்து விட்டான் – தருமன் மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான் - தருமன் ஆளிழந்து விட்டான்;
பீடிழந்த சகுனி – அங்கு, பின்னுஞ் சொல்லுகின்றான்;
நாடிழக்கவில்லை – தருமா! நாட்டை வைத்தாடென்றான்,’’

தருமன் நாட்டை வைத்தாடி இழக்கிறான். திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்தபோது, கௌரவர் கொண்ட மகிழ்ச்சியில் ஆரவார ஒலி கேட்கிறது.

         ‘’திக்குக் குலுங்கிடவே – எழுந்தாடுமாம்
         தீயவர் கூட்ட மெல்லாம்
         தக்குத்தக்க கென்றே அவர்
         குதித்தாடுவார்’’

இதில் ஒலிநயத்திற்கேற்ப சொற்கள் இயல்பாகவே வந்து விடுகின்றன பாரதிக்கு…!

பாஞ்சாலி சபதத்தில் உவமை நயம்

      கற்பனை என்ற விதையிலே முளைப்பதுதான் உவமம் என்ற பயிர். பாரதியின் உவமைகள் தெளிவும் செறிவும் மிக்கன. பண்பு சான்ற படைவலி மிக்க பாண்டவரை எதிர்ப்பது வெள்ளத்தைப் புல்லொன்று எதிர்த்தல் போன்றது என்றும் மாமலையை மட்குடத்தில் அடைக்க முற்படுவது போன்றது என்றும் பாரதி கூறுகின்றார்.
      அவமதிக்கப்பட்ட பாஞ்சாலி ‘அம்பு பட்ட மான் போலத்’ துடிக்கின்றாள். அதுகண்டு ‘குன்று குதிப்பது போல்’ குதிக்கின்றான் துரியோதனன். ஏனையரோ ‘நெட்டை மரங்களென’ நின்று பெட்டைப் புலம்பல் புலம்புகின்றார். இவ்வாறு பாரதிக் கூறும் உவமைகள் சொற் சுருக்கம் உடையவை என்றாலும் செறிந்த கருத்துடையவை.





உணர்ச்சி வெளிப்பாட்டியல் மிகுந்த பாடல்கள்

      ‘உணர்ச்சிச் சொற்களுக்கு உறுதி உண்டு’ என்பார் பண்டிதமணி கதிரேசனார். இத்தகு உணர்ச்சி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மிகுந்துள்ளது.
      பாண்டவரின் மேன்மையைக் கண்ட துரியோதனனின் உள்ளத்தில் அழுக்காறு தோன்றுகின்றது. அவன் ‘நொள்ளைக் கதைகள்’ பேச முற்படுகின்றான். சூதாடத் தயங்கும் தருமனை, ‘சூர சிகாமணியே’ எனக் கிண்டல் செய்கிறான். சின்னச் சகுனி சூதில் கெலித்தான். மோசச் சகுனியோ அதுகண்டு ‘தக்குத் தகவென்று’ ஆடினான். அம்மட்டோ? ‘கக்குக்கக்கென்று’ நகைத்தான். பாஞ்சாலி சபதத்தில் புலம்பலுக்கு ‘நெட்டோசையும் பகடை உருட்டுதற்கு உருளும் ஓசையும் அமைத்துக் காட்டியுள்ளார் பாரதியார்.

குறியீட்டியல்
      
       பாஞ்சாலியின் கதையைச் சித்தரிக்கும் பாஞ்சாலி சபதம் விடுதலை உணர்வையே தன் உயிரோட்டமாகக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இக்கதை எழுதப்பட்டதால் அகத்தே இருள் உடையவனாகிய துரியோதனன் ஆங்கிலேயரின் உருவாகவும் தருமன் பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னனாகவும், மாயச் சகுனி மாயச்சூதால் பொன்னையும் மணியையும் ஆட்டையும் மாட்டையும் நாட்டையும் கவர்ந்து கொள்வதால் வாணிகம் என்ற பெயரோடு வந்து புகுந்த ஆங்கிலேயர் நாட்டையே அடிப்படுத்தி நாட்டு மக்களையும் தமது வலையில் விழச் செய்வதைக் குறிப்பதாகவும் ‘மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ’ என்ற திரௌபதியின் கூற்று, வாணிகம் செய்ய வந்த மாநிலத்தையே கவர்ந்து கொண்ட ஆங்கிலேயரின் கொடுமைமைக்காகக் குமுறும் கொதிப்பே ஆகும் எனத் தமிழ் தமுதுகலைப் பேராசிரியர் முனைவர் பி. தெட்சிணாமூர்த்தி தமது ஆய்வுமாலை (1982) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

      ‘’பாஞ்சாலி சபதம்’’ பாரதியாரால் 1912 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகும்.

      ‘’பாஞ்சாலி சபதம்’’ இரண்டு பாகங்களால் ஆனது. மகாபாரதத்தின் ஒரு பகுதி கதையையே பாரதி ‘’பாஞ்சாலி சபதமாக’’ உருவாக்கியுள்ளார். அழைப்புச் சுருக்கம், சூதாட்டச் சுருக்கம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்ட முதற் பாகம், தமுரர் சூதாட்டத்தில் நாட்டை வைத்து இழப்பதோடு முடிகிறது. இரண்டாம் பாகம், தருமர் சூதாட்டத்தில் திரௌபதியை இழத்தில், துரியோதனன் அவளைச் சபைக்கு அழைத்து மானபங்கப்படுத்துதல், பாஞ்சாலி முதல் ஒவ்வொருவரும் செய்யும் சபதம் முதலிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் என்னும் மூன்று சருக்கங்கள் இதில் உள்ளன.
      பின்வரும் இரண்டாம் பாகத் துகிலுரிதற் சருக்கப் பகுதியில் தருமர் சூதாட்டத்தில் திரௌபதியை இழத்தல், அதனால் உலகில் உண்டான குழப்பம், துரியோதனன் விதுரனிடம் திரௌபதியை சபைக்கு அழைத்து வருமாறு கூறல், அது கேட்டு வருந்திய விதுரனின் அறிவுரை, துரியோதனன் தேர்ப்பாகனிடம் இட்ட கட்டளை, அக்கட்டளை கேட்டுத் திரௌபதி சொன்ன மறுப்பு, அம்மறுப்பை அவன் சபையில் கூறல் ஆகியவை கூறப்படுகின்றன.
      பாஞ்சாலி சபதத்தின் ‘துகிலுரிதற் சருக்கம்’ பகுதியில் பாஞ்சாலியை மகாபாரதக் கதையின் மாந்தராக மட்டும் பாரதி காணவில்லை. அதற்கும் மேலாகப் பராசக்தி, பாரத சக்தி, பெண்மை ஆகியவிற்றின் மொத்த உரிவமாகவே அவர் பார்க்கிறார். எனவேதான் பாஞ்சாலி அடிமையான காட்சியை அவ்வளவு உணர்ச்சி வயப்பட்டுப் பாடுகிறார்.

பாஞ்சாலி சபதக் கதையின் சுருக்கம்.

       சகுனியின் தூண்டுதலின் பேரில் பாண்டவர்களை அஸ்தினாபுரத்திற்கு வருமாறு துரியோதனன் அழைப்பு விடுகிறான். சூதாட்டத்தில் வல்லவனான சகுனியும் துரியோதனனும் ஒன்று சேர்ந்து, பாண்டவர்களைத் தங்களுக்கு அடிமையாக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். முதலில் தன் தந்தையார் திருதராஷ்டிரன் அழைப்பதாகப் பாண்டவர்களுக்கு அழைப்பு விடுக்க துரியோதனன் விரும்புகிறான். ஆனால் திருதராஷ்டிரன் அது தவறு என்று மறுத்து விடுகிறான். தன் திட்டத்திற்குத் தந்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகப் பாசாங்கு செய்கிறான் துரியோதனன்.

           ‘’நைய நின்முன் என்சிரங் கொய்தே
                 நானிங் காவி இறுத்திடு வேனால்
           செய்ய லாவது செய்குதி என்றான்
                 திரிதராட்டிரன் நெஞ்ச முடைந்தான்’’

      ஆகவே, திருதராட்டிரன் துரியோதனன் சூழ்ச்சிக்கெல்லாம் இணங்கினான். விதுரனையே தூதுவனாக அனுப்புவதென்று தீர்மானம் செய்தார்கள். தருமனும் துரியோதனன் உண்டாக்கிய மாளிகையைப் பார்க்க வருவதற்கு இசைந்தான். விருந்துக்குப் பின்னர் பொழுதிபோக்காகச் சூதாடலாம் என்றான் சகுனி. தருமனும் சூதாடச் சம்மதித்து, பின்னர் நாட்டையே வைத்து ஆடவும் துணிகிறான். தருமன் மிக அற்பமான ஒன்றைச் செய்துவிட்டதை
                        ‘’கோயிற் பூசை செய்வோர் – சிலையைக்
                              கொண்டு விற்றல் போலும்
                        வாயில் காத்து நிற்போன் – வீட்டை
                              வைத்தி ழத்தல் போலும்
                        ஆயி ரங்க ளான – நீதி
                              யவைஉ ணர்ந்த தருமன்
                        தேயம் வைத்தி ழந்தான் – சிச்சீ!
                              சிறியர் செய்கை செய்தான்

      இறுதியில் சூதாட்டத்தின் பயனாக எல்லாம் போய்விடுகின்றன. தன் உடன் பிறந்தவர்களையும் அவன் விட்டு வைக்கவில்லை. அது மட்டுமா? பாஞ்சாலியையும் அடிமையாக்கி விடுகின்றான். துரியோதனன் தன் தம்பி துச்சாதனனையே அனுப்பி, அவைமுன் வர மறுத்த பாஞ்சாலியை இழுத்து வருமாறு பணிக்கின்றான். இந்த இடத்தில் துச்சாதனன் எப்படிப்பட்டவன் என்று குணநலன்களை கவிஞர் விளக்குகிறார்.
    
                 ‘’புத்தி விவேக மில்லாதவன் – புலி
                       போல உடல்வலி கொண்டவன் – கரை
                 தத்தி வழியுஞ் செருக்கினால் – கள்ளின்
                       சார்பின்றி யேவெறி சான்றவன் – அவ
                 சக்தி வழிபற்றி நின்றவன் – சிவ
                       சக்தி நெறிஉண ராதவன் - இன்பம்
                 நத்தி மறங்கள் இழைப்பவன் – என்றும்
                       நல்லவர் கேண்மை விலக்கி னோன்’’

      துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிக் கொண்டு வீதி வழியே வருகின்றான். ஊர்மக்கள் யாவரும் அக்கொடுமையைத் தடுக்காது, வீரமில்லாத நாய்கள் போன்றிருந்த கீழ்மையைப் பாடுகின்றார் பாரதியார். வேடிக்கைப் பார்க்கும் உதவாக் கரைகள் அவர்கள் என்பதனை:-

                  ‘’என்ன கொடுமையிது என்று பார்த்திருந்தார்
                  ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ
                  வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்…’’

என்று பாடியதுடன்;


                  ‘’நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
                  பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?’’
என்றார் அவர்.


      ‘’பாஞ்சாலி சபதம்’’ என்ற நூலை இயற்றியவர் சுப்பிரமணிய பாரதி ஆவார். பெண்ணுரிமையில் நாட்டங்கொண்ட பாரதியார், பாஞ்சாலியை ஒரரு புதுமைப் பெண்ணாகப் படைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாட்டு வாழ்வியல் தாக்கத்தின் விளைவால், பெண்களைப் பற்றிய சிந்தனையில் சில மாற்றங்கள் ஏற்படலாயின. வேதநாயகம் பிள்ளை, மாதவையா, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை போன்ற இலக்கியப் படைப்பாளர்கள் பெண்ணுரிமைப் பற்றிப் பேசிய தமிழக மறுமலர்ச்சியின் முன்னோடிகள். மறுமலர்ச்சியின் தாக்கத்தை முழுமையாகப் பெற்றுவரும் தமிழ்ப் புலவர்களின் முடிமணியாய்த் திகழ்பவருமான பாரதி, குமுகாய மறுமலர்ச்சியின் பேருருவமாகத் திகழ்கிறார். தமிழ் மரபுகளையும் உலக மரபுகளையும் சரியாகப் புரிந்துகொண்ட பாரதியார் பழைய மரபுகளைப் பழிப்பதோடு, புதிய மரபுகளைப் படைக்கிறார்.

பாரதியும் பெண்ணுரிமையும் 

       ‘’பெண்களுக்கு விடுதலை கொடுத்தால் நாடு நலம் பெறாது. இம்மண்ணுலகமே தலைக்கீழாய்ப் போய்விடும்’’ என்றே பலர் நடுங்குகிறார்கள். ‘’பெண்களை அடிமைப்படுத்தியே ஆணுலகம் இருக்கவேண்டும்’’ என்றெல்லாம் ஆணாதிக்க உலகம் பேசி வருவதை அறிந்த பாரதி, பெண்ணுரிமைப் போர்முரசு முழங்கினார்.

                  ‘’நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்
                        நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
                  தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
                        சாலவே அரிதாயதொர் செய்கை’’

என்கிறார் பாரதியார். அதாவது நிலத்தின் தன்மைக்கேற்ப அதில் விளையும் பயிரின் தரமும் இருக்கும். அதைப்போல் அடிமைத்தனமும் அறியாமையும் மிகுந்த பெண் வயிற்றிலிருந்து, அறிவார்ந்த பிள்ளைகள் பிறப்பது அரிது. மக்கள் அறிவோடும் உரிமையோடும் வாழவேண்டுமென்றால் அவர்களைப் பெற்றெடுக்கும் தாய் உரிமையுள்ளவளாக, அறிவாளியாக இருக்கவேண்டுமென்பது பாரதியின் முடிவு. பெண் இயல்பாகவே அறிவுடையவள். அவள் அறிவைக் கெடுத்தவர்கள் மூடர்களான ஆண்கள் சிலரே என்கிறார் ஆவர்.

                  ‘’பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
                        பேணி வளர்த்திடும் ஈசன்
                  மண்ணுக்குள்ளே சிலதூடர் நல்ல
                        மாதர் அறிவைக் கெடுத்தார்’’
                  ‘’மாதர் தம்மை இழிவு செய்யும்
                        மடமையைக் கொளுத்துவோம்
                  வைய வாழ்வு தன்னில் எந்த
                        வகையிலும் நமக்குளே
                  தாதர் என்ற நிலைமை மாறி
                        ஆண்களோடு பெண்களும்
                  சரிநிகர் சமானமாக
                        வாழ்வம் இந்த நாட்டிலே’’

      இவ்வாறே, பாரதியின் விடுதலை முழக்கம் அமைந்துள்ளது. பாஞ்சாலி சபதம் மண் விடுதலையையும் பேசுகின்றது; பெண் விணுதலையையும் பேசுகின்றது. அடிமை நிலையை எதிர்த்து எழுப்பப்பட்ட பெண் ஒருத்தியின் குரலாகப் பாஞ்சாலி சபதம் திகழ்கின்றது.
      தன் ஆடையைக் களைந்து அவமானப்படுத்தி, அடிமை என்று அறிவித்த பகைவர்களைப் பழிவாங்கும் வரை, தன் கூந்தலை முடிவதில்லை என்கிறாள் பாஞ்சாலி.

                  ‘’பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
                        பாழ் துரியோதனை ஆக்கை இரத்தம்
                  மேவி இரண்டுங் கலந்து – குழல்
                        மீதினில் பூசி நறுநெய் குளித்தே
                  சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
                        செய்யுமுன்னே முடியேன்’’

என்று சூளுரைத்தாள்.

      அவள் அவ்வாறு சபதம் செய்ததற்கு அடிப்படைக் காரணம், சூதாட்டத்தில் தன் உடமைகள் அனைத்தையும் இழந்த தருமன், தன்னையும் தன் தம்பியரையும் பணயமாக வைத்து இழந்துவிடுகிறான். வெற்றி பெற்ற துரியோதனன் அவளை அவைக்கு அழைத்து வந்து, அவள் தனக்கு அடிமையாகித் தன் பொருளாகி விட்டாள் என்பதை நிறுவ முயல்கிறான். அவள் அடிமைப்பட்டதாகப் பாஞ்சாலி ஒப்புக் கொள்ளவில்லை. அவளை அழைத்துப் போக வந்த தேர்ப்பாகனிடம் அவள் கூறுகின்றாள்.

                  ‘’வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
                  என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே
                  முன்னம் இழந்து முடித்தென்னத் தோற்றாரா?
                  சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா….’’

என்று கேட்டு அனுப்புகிறாள்.

      பாஞ்சாலியின் வாதத்தில், தான் தன் கணவன்மாரின் உடைமை இல்லையென்பதும், எனவே, தன்னை சூதில் பணயமாக வைப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை என்பதும் தெரிய வருகின்றது. தான் பாண்டவருக்கு மனைவி என்றாலும் ஒரு நாட்டின் இளவரசி என்பதால் தனி உரிமையும் ஆளுமையும் உடையவள். ஆகவே, தான் உடைமைப் பொருள் இல்லை; பணயமாக வைப்பதற்குச் சட்டமில்லை என்று கூறுகிறாள்.
      பாஞ்சாலியின் வாதம் மிகவும் துணிச்சலுடைய, விழிப்படைந்த பெண் பேசுவதுபோல் இருக்கின்றது. பாரதியார், பாஞ்சாலியை ஓர் அறிவார்ந்த பெண்ணைப் போல பேச வைத்திருப்பது பெண்ணுரிமையின் எழுச்சிக்கு வித்திடுகின்றது.

வீமன் சூளுரை

        கொடியவன் துண்சாதனன் எழுந்து அவையோர் முன்னிலையில் பாஞ்சாலியின் ஆடையைக் களையத் தொடங்குகிறான். வீமன் துடிக்கிறான். அந்தக் கொடுஞ்செயலைக் கண்டிக்க, தடுக்க எவரும் முன்வரவில்லை. வீமனாலும் தடுக்க முடியாத நிலை. இருப்பினும் கண்ணன் அருளால் ஆடை வளர்கிறது. களைந்த ஆடையின் குவியலைக் கண்டு, கலங்கி கீழே விழுகிறான் கயவன் துச்சாதனன். அப்போது, வீமன் தெய்வங்களின் மீது ஆணையிட்டுக் கூறுகிறான், ‘’இந்த ஆண்மையில்லாத் துரியோதனன் பெரு நெருப்பு போன்ற பாஞ்சாலியைத் தொடை மீது வந்து உட்காரும்படிக் கூறி கேவலப்படுத்தினான். போர்க்களத்தில் மானங்கெட்ட அரசர்களின் கண்ணெதிரில் இந்த நாய் மகனின் தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன். அவன் தம்பி துச்சாதனனின் தோள்களைப் பிய்த்து அதிலிருந்து ஒழுகும் குருதியைக் குடிப்பேன்’’ என்று சபதமிட்டான்.
பாஞ்சாலி சபதத்தின் கதைச் சுருக்கம்

       அத்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து திருதராட்டிர பன்னின் மூத்த மகன் துரியோத்தனன். அவன் பேராசையும் பொறாமையும் கொண்டவன் இவன் தான் சிறிய தந்தை பாண்டுவின் பிள்ளைகளான பாண்டவர்களிடம் தீராப் பகை கொண்டவன். பாண்டவர்கள் தம் தந்தை இறந்தபின் திருதராட்டிரன் அரண்மனையில் வீட்டுமனின் வீட்டுமனின் அரவணைப்பில் வளர்ந்தனர். துதோணாச்சாரியிடம் போர்கலைகளையும் பிற கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர். துருபத மன்னன் நடத்த்திய வில் போட்டியில் வெற்றி பெற்ற அர்ச்சுனன் (திரௌபதி) பாஞ்சாலியைப் பரிசாகப் பெற்கிறான். அவள் பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகிறாள். பின்னர் பாண்டவர்கள் பெயரும் புகழும் பெறுவதைக் கண்ட துரியோதனன் பொறாமைத்தீயில் புழுவாய்த் துடிக்கிறான். எப்படியாவது பாண்டவர்களின் சொத்துகளைப் பறித்துக்கொள்ள திட்டமிடுகிறான். தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வகையறியாமல் சூதும் பொய்யுமே உருவெடுத்த தன் மாமன் சகுனியை அடைந்து வழி கேட்கிறான்.

                        ‘’தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
                              ஒன்று செய்து நாம் – அவர்
                        செல்வங் கவர்ந்து அவரைவிட
                              வேண்டும் தெருவிலே’’

என்று தன் எண்ணத்தைச் சகுனியிடம் கூறுகிறான்.

      சகுனியின் திட்டப்படி சூதாட்டத்துக்குத் திருதராட்டிரன் அரைமனத்திடன் இசைகிறான். தேவர் உலகத்தில் இருப்பதைப் போன்ற அழகிய மாளிகை புதிதாக எழுப்பப்படுகிறது. பாண்டவர்கள் அம்மாளிகையின் விருந்துக்கு அழைக்கப்படுகின்றனர். நயவஞ்சகமாகச் சூதாட்டமும் நிகழ்த்தப்படுகின்றது. துரியோதனனுக்காகச் சகுனி காயை உருட்டுகிறான். அறநூல்கள் பலவற்றைக் கற்றுணர்ந்த தருமன் சூதாட்டத்தில், பொன், பொருள், ஆடு, மாடு, நாடு அனைத்தையும் ஒவ்வொன்றாக இழந்து விடுகிறான். பின்னர் தம்பியர் நால்வரையும் இறுதியில் தன்னையும் பணயமாக வைத்து இழந்து விடுகிறான். பாஞ்சாலியைப் பணயமாக வைத்து ஆடி வெற்றி பெற்றால் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறலாம் என்று ஆசை காட்டுகிறான் சகுனி. சகுனி கூறியதைக் கேட்ட துரியோதனன் சிறுமதி உடைய நாய் பாத்திரத்திலுள்ள தேன் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டு, வெறும் நாக்கைச் சப்புக் கொட்டிச் சுவைத்து, பேரழகி பாஞ்சாலி தனக்குக் கிடைத்துவிட்டதைப் போல் மயங்கி மகிழ்கின்றான். சூதில், பாஞ்சாலியை வென்ற கவுரவர்கள் களித்துக் கூத்தாடினர். கூவி மகிழ்ந்தனர். பாஞ்சாலி அடிமையாக்கப்பட்டாள்.

பாஞ்சாலி சபதமும் நாட்டு விடுதலையும்


      மிகப் பெரிய போர் புரிந்து, பகைவர்களை வீழ்த்தி, நாட்டை விடுதலை செய்தார்கள் பாண்டவர்கள். அதைப் போல, தமிழகமும் பிற இந்தியப் பகுதிகளிம், வாணிகம் செய்ய வந்த வெள்ளையரான ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததை எண்ணியே, நாட்டை விடுவிப்பதற்கு வெள்ளையரை எதிர்த்துப் போராடத் தூண்டுதலாக அமையும் என்ற நோக்கிலேயே, பழம்பெருங் காவியத்தின் ஒரு காட்சியைப் பாஞ்சாலி சபதமாகப் படைத்துள்ளார் பாரதியார் என்பதில் மிகையில்லை. ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராட முன்வராமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு, முடி சூட்டிக் கொண்டும் பட்டம் மதவிகளைப் பெற்றுக்கொண்டும், தங்களின் சொந்த நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்கள் அப்போதிருந்த மேல்தட்டு வர்க்கத்தினர் என்பதால், பாரதியின் புரட்சி பாஞ்சாலி சபதமாக வெடித்தது என்பது உண்மை.

1 comment:

  1. நல்லதொரு கதை சுருக்கம். Blogger பற்றிய சந்தேகங்களை உங்களிடம் கேட்டறிய நான் விரும்புகிறேன். உங்களைத் தொடர்பு கொள்ள முடியுமா சகோ.

    ReplyDelete