30 November 2016

பாரதிதாசனும் தமிழ்மக்களும்

பாவேந்தர் பாரதிதாசனார் தமிழின வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றால் மிகையாகாது. தமிழரிடையே புத்துணர்ச்சியும் விழிப்புணர்ச்சியும் பிறக்கப் பாட்டெழுதியவர். ஆரிய பார்பனீயத்தில் சிக்கிச் சீரழிந்து வீழ்ந்துபட்ட தமிழினத்தை மீட்டெடுக்கத் தரமானப் பாக்களைப் புனைந்தவர். ஓய்வு ஒழிச்சலின்றித் தமிழுக்கும் தமிழினத்துக்கும் தொண்டாற்றித் தமிழினக் காப்பிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
      பாரதிதாசனாரால் தமிழ் இனித்தது. வீரம் செழித்தது. அவர் படைத்துள்ள பல்வேறு உணர்ச்சிமிக்க பாடல்கள் தமிழரைத் தட்டியெழுப்பும் வல்லமைப் படைத்தவை. தமிழ் இளையோர் அவற்றைப் படிக்கவேண்டும். அவரின் கருத்துகளைச் செயல்படுத்தி தமிழின் மீட்சிக்கு வழிகோலவேண்டும்.
      பாரதிதாசனார் எழுதிக் குவித்த ஒவ்வொரு கவிதையுமே உறங்கிக் கிடந்த தமிழினத்தைத் தட்டி எழுப்பும் போர்முரசுகளாக, அடக்க நினைத்த ஆரியர்களைச் சுட்டெரிக்கும் எரிதழலாகக் காயம்பட்ட இனத்துக்கு மருந்திடுபவையாக, அவர்கள் உய்வதற்கான வழிவகைகளைக் கூறுபவர்களாக மட்டும் அல்லாது, பொதுவுடமை கருத்தையும் அதிகம் வலியுறுத்தி பல்வேறு பாடல்களைப் புனைந்திருப்பது, பாரதிதாசன் குறிப்பிட்ட ஒரு கருத்தில், வட்டத்தில் நின்று சிந்தித்தவரில்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

                                       
பாவேந்தரின் தமிழ்ப்பற்று

மறைந்த முன்னாள் சென்னை மாநில முதலமைச்சராக திரு. இராசகோபாலச்சாரி இருந்தபொழுது தமிழ்நாட்டில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பொங்கி எழுந்த தலைவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் திராவிட நாடு திராவிடருக்கே என்றும் முழக்கங்களை முன் வைத்தனர்.
பாவேந்தரின் பாடல்கள் பல இந்தித் திணிப்பைக் கடுமையாய் எதிர்ப்பனவாய் அமைந்தன. அவர் தந்தை பெரியாராலும் திராவிட இயக்கத்தினராலும் திராவிட இயக்கப் பாவராய் பெரிதும் மதிக்கப்பட்டார். 1946 இல் அறிஞர் அண்ணா 25,000 உருவாவைத் தண்டிப் பொற்கிழியாய் வழிங்கிச் சிறப்பித்தார்.

‘’நம்நாடு தமிழ்நாடு; நாமெல்லாம் தமிழ்மக்கள்;
            இன்பம் கோரி
இன்னிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே! அம்மூச்சுந்
            தமிழே! அந்தப்
பொன்னான தமிழாலே தமிழ்ச்சான்றோர் புகன்றதமிழ்ச்
            சட்டம் ஒன்றே!
இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டுமதை இகழ்வாரை
            ஒடுக்க வேண்டும்.’’

இத்தகைய மொழிக்காப்பு, மொழியுணர்வு தமிழக மண்ணில் பாரதிதாசனரால் ஊன்றப்பெற்றன.
      பாரதிதாசன் பாடல்களில் அடிமையுற்றுக்கிடக்கும் தமிழர்க்கு வேண்டிய ஆக்கமும் பேரளவில் ஊட்டப்பெற்று, நாட்டு விடுதலைக்கும் மொழிவிடுதலைக்கும் போராடுமாறு அவர்களுக்கு அழைப்பு விடப்பெற்றிருப்பதுமே.
      பாராதிதாசனாருக்கு பகுத்தறிவுக் கொள்கை, பொதுவுடைமைக் கொள்கை ஆகியவற்றில் மிகுந்த பற்றிருந்தது போலவே தனித்தமிழிலும் அவர்க்கு ஆழ்ந்த பற்று இருந்தது.

                  ‘இன்று பிரசங்கம் இல்லை’ என்று
                  விரோதை சொன்னாள்; வேந்தன், ‘’விரோதையே
பிரசங்கம் என்ற பேச்சின் பொருந்தான்
விளங்கவில்லை’’ என்று விளம்பினான்.
ஏதும் சொல்ல இயலா திருந்தாள்!     

‘’பிரசங்கம் என்றால் உபந்யாசம்’’ என்று
சிவானந்தன் என்பான் செப்பவே
அதுவும் புரியா தரசன் விழித்தான்
சிவசம்பந்தன் செப்பு கின்றான்!

‘’உபந்யாசம் என்றால் உயர்ந்தோர் சொல்வது
சொற்பொழிவென்பது தாழ்ந்தசொல்’’ என்றான்
எட்டித் தலையில் உதைத்தான் ஏந்தல்

‘’சேவடி வாழ்க என்றான் சில்லி!’’

தனித்தமிழ்ச் சொல்லைப் பழித்தது கேட்டுப்பொறாமல் தனித்தமிழைப் பழித்த சிவசம்பந்தனை, மன்னன் ‘எட்டித் தலையில் உதைத்தான்’ என்று பாவேந்தர் படைத்தார். பாவேந்தரே இங்கு மன்னனாக மாறித் தம் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனித்தமிழ்ப் பற்றின் கரணியமாகப் பாவேந்தர்,

‘’தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு
தமிழே ஞாலத்தின் தாய்மொழி பண்டு’’      என்றும்,
‘’இயற்கை யன்னை அருளிய இன்பத்தமிழ் அயல்மொழி வேண்டாஆர் எழுல்சேர் தமிழ் நிறைதமிழி! இந்நாள் நெடுநிலம் முழுதும் குறைவில் தென்றுகுறிக்கும் தனித்தமிழே’’
என்றும் பாடினார். அதுமட்டுமன்றி எப்போதும் தனித்தமிழ் நினைவாக வாழ்ந்தார் என்பதைத்,

                  ‘’தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்
                  தூய்த்தமிழ் பிதற்றும் என்வாய்’’    

என்றும் வெளிப்படுத்தினார். பாராதிதாசன் தமிழ்மீது தீராதப்பற்று இருந்தமைக்குச் சான்றாகப் பின்வரும் அவரின் பாடல் திகழ்கிறது.

                  ‘’தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
                  தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
                  தமிழுக்கும் நிலவென்றுபேர்! – இன்பத்
                  தமிழ்எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…!’’

பாவேந்தர் இயற்றிய தனித்தமிழ் இலக்கியங்களானவன

       பாரதிதாசன் கவிதைகள், பாண்டியன் பரிசு, காதலா கடமையா?, குடும்பவிளக்கு, குறிஞ்சித்திட்டு, இருண்டவீடு, கண்ணகி புரட்சிக் காவியம், மணிமேகலை வெண்பா, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், பாரதிதாசன் ஆத்திசூடி இன்னோரன்ன குறிப்பிடத்தக்கவை.

வீரத்தமிழன்

       தமிழினத்தின் தலைவனைக் கூறுங்கால் பாரதிதாசனாரின் பாடல் நாயகனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது:-

            தென்றிசையைப் பார்க்கின்றேன், என்சொல்வேன் என்றன்
            சிந்தையெல்லாம் தோள் களெல்லாம் பூரிக்குதடா!
            அன்றந்த லங்கையினை ஆண்ட மரத்தமிழன்
            ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
            குன்றெடுக்கும் பெருந்தோலான் கொடைகொடுக்கும் கையான்
            குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூடற்றம்!
            என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்
            இராவணன்காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்!

வீரத்தமிழனின் மாவீரத்தையும் பண்பு நலன்களையும் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வெழுச்சிப் பாடலை பாவேந்தர் படைத்திருக்கிறார்.
      இந்நாள் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்குத் தெரியாத வேற்றுமொழியிலே வாதிடுவதுபோல வெறும் சொல்விளையாட்டை மட்டுமே கவிஞனால் நடத்திக்கொண்டு இருக்கமுடியவில்லை; நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதியாகிய நாட்டு மக்களை நோக்கி,

                  ‘’கொலை வாளினை எடடா – மிகு
                        கொடியோர் செயல் அறவே,
                  குகைவாழ் ஒரு புவியே – உயர்
                        குணமேவிட தமிழா!

என்று ஓர் அறைகூவலையே விடுத்துவிடுகிறான்.

பாரதிதாசன் என்ற பெயரை மாற்றுங்கள்

       பாரதியார் ஒரு பார்ப்பனர். அவருடைய பெயரை இணைத்து தாசன் என்று வைத்திருக்கிறீர்களே, தாசன் என்றால் வடசொல். பாரதிதாசன் என்ற பெயரை நீக்கிவிடுங்கள். பாரதிக்கு அடிமை என்று பொருள்படுகிறது என்று அஞ்சான் நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் திராவிடர் கழகத்தினரும் கூறியதற்கு பாரதியைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். பார்ப்பன நெறிகளைப் புறந்தள்ளுபவர், சாதி இல்லையென்று வாழ்ந்து காட்டியவர் என்று துணிச்சலுடன் கூறினார். இவரின் துணிச்சல் வேறு எவருக்கும் வரா.

பாரதிதாசன் நோக்கில் அறம்

       அறம் என்ற சொல்லைத் தம் படைப்புகளில் பல்வேறிடங்களில் கையாண்டு அச்சொல்லுக்கு பெரும் பொருண்மையைப் பாவேந்தர் ஏற்படுத்தியுள்ளார். அறத்தை அடிப்படையாகக் கொண்டதே வீரம் என்றும் மாறாகப் பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்புக்கொள்வதில்லை என்றும் தம் கருத்தினை ‘’தமிழச்சியின் கத்தி’’ யில் பாவேந்தர் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சாதி


       சாதிக்கொரு நீதிகொண்ட மனுதர்மத்தைப் புறம்காணப் போராடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பாவேந்தர்.