04 December 2016

மலேசியத் தமிழர் இர.ந. வீரப்பனார்


1.   மலேசியாவில் குடியேறியவர்களுள் தமிழரே முதற்குடி மக்கள் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
வடமலாயா, கெடா மாநிலம், தென் தாய்லாந்து ஆகிய வட பகுதிக்கு ‘வங்காசுகம்’ என கி.பி. 502 – 556 அளவில் எழுதப்பெற்ற ‘வியாங் வரலாறு குறிக்கிறது. கி.பி. 1012 இல் ‘கடாரங்கொண்டான்’ என்ற சிறப்புப்பெயர் பெற்றவனான இராசேந்திர சோழன் முடிசூட்டப்பட்டான். இவன் நக்காவரம் (நிக்கோபார்), அந்த மான், இலங்கை, சாவா, இந்தோனேசியா, வட மலாயா முதலிய கடல் கடந்த நாடுகளையும் தன் குடையின்கீழ் கொண்டு வந்தான்.
இவன் காலத்தில் மலாயாவின் மேற்குக் கரையிலுள்ள வடபகுதி துறைமுகம் தக்கோலம் (தகுவப்பா) என்றழைக்கப்பட்டது. தென் பகுதியிலுள்ள கோலமூடா ஆற்றுமுகம் ஒரு துறைமுகமாக இருந்தது. மணமாகாதார் மாவட்டம் என்றழைக்கப்பட்ட ‘பூஜாங் பள்ளத்தாக்கில்’ படைவீட்டுப் பாசறைகள் இருந்தன. சோழர் படைகள் இங்குத் தங்கியிருந்தன. இதன் தெற்கே புதையுண்டுப் போன ‘கங்காநகரம்’ இருந்தது. ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புக்குரிய வெற்றி விருது பெற்ற இராசேந்திரனே இந்த நகரத்தையும் அமைத்தான். வடக்கே ‘லங்காசுகம்’ தெற்கே ‘கங்கை நகரம்’. கங்காநகரம் புருவாஸ் கம்பங் கோட்டா பகுதியில் இருந்தது.
சோழரின் புலிக்கொடியே அன்று பறந்தது. அந்தச் சின்னமே இன்றும் மலேசிய நாட்டின் தேசிய சின்னமாகவும் இருக்கிறது. ‘லோவர் பேராக்’ என்பது தாழ்ந்த நிலப்பகுதியானது. ‘ஊத்தான் மெலிந்தாங்’ என்பது சதுப்பு நிலக்காடுகள் சூழ்ந்த சேற்றுப்பகுதி. இப்போதுள்ள கம்போங் மானிக், கம்போங் காஜா என்பவை 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் மணிக்கிராமம், யானைக்காடு என்று பெயர் பெற்றுச் சிறந்த வணிகப் பகுதிகளாகச் செழிப்புற்றிருந்தன.
பல்லவ மன்னர்களான தமிழர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன் ஈப்போ, சுங்கை சிப்புட் பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. அப்போது குகைப்பாறைகளில் தீட்டப்பட்ட மனித உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் புக்கிட் பத்து (கல்மலை) ஜாலோங்கில் உள்ளன. சுங்கை சிப்புட்டிலிருந்து 5 கல் தொலைவில் இருக்கும் இந்த இடத்தின் பெயர் ‘குவா கெலவார்’ என்பதாகும். 1936 இல் அக்குறிப்புகளையும் ஓவியத்தையும் கண்டு ஆங்கிலர் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். பல்லவர்கள் இப்பகுதிகளில் புத்த சமயத்தைப் பரப்பிய தமிழர்கள் எனத் தெரிகிறது. இவர்கள் புத்த கலாசாரப் பொருட்களையும் சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆதியில் பழைய குடிகளாக வந்தவர்களில் தமிழர்களே முதற்குடியினர் என்பதை அவை உறுதிப்படுத்துகின்றன. பல்லவர் கால ஆட்சியின் அழிபாடுகள் 4 ஆம், 5 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தன. சோழர் காலத் தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அவர்கள் போரிட்டுப் பல பகுதிகளை வென்று தமிழர் குடியேற்றப் பகுதிகளை அமைத்திருக்கின்றனர் என்று குறிப்புகள் உள்ளன. 1980 இல் புதைபொருள் ஆய்வாளர்களால் அகழ்வாய்வு செய்யப்பட்ட கெடாவில் ‘லெம்பா பூஜாங்’ பகுதிகள் ஆய்வாளர்களால் அகழ்வாய்வு செய்யப்பட்ட கெடாவில் தமிழையும் இங்குப் பரப்பினர். சோழர்களின் இந்த ஆட்சியைக் குறித்து தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உள்ளன.
2.   நைனாசெட்டி என்பவர் யார்?
1510 இல் மலாக்காவில் மிகவுஞ் செல்வாக்குப் பெற்றிருந்த கப்பல் வணிகராக இவர் இருந்திருக்கிறார். இவருடன் நைனாசூரதேவசேனன், இராஜ முதலியார், கிட்டுல் ஆகியோரும் சிறந்த வணிகர்களாகத் திகழ்ந்துள்ளனர். மலாக்கா சுல்தான்கள் காலத்தில் அரசியலிலும் இவர்கள் ஈடுபட்டனர்.
நைனா செட்டியார் 1510 இல் தம் கப்பலுடன் இந்தியா சென்ற வேளையில் போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றியதையும் அவர்கள் மலாக்காவையும் வீழ்த்த வருவர் என்ற செய்தியைத் திரும்பி வந்து எட்டாவது மலாக்கா மலாய் அரசனிடம் கூறினார். மலாக்கா அரசனிடம் செல்வாக்குப் பெற்று நண்பராகவும் அவர் இருந்துள்ளார்.
3.   உத்திமுத்துராஜா என்பவர் யார்?
1511 ஆம் காலப்பகுதியில் மூவாரில் – அகமட் மன்னர்கள் இருந்தனர். இவர்களுடன் அணுக்கத் தொடர்பு கொண்டிருந்தவரே உத்திமுத்துராஜா என்ற வணிகர். மலாய் மன்னர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்த இவரைச் சிறையில் அடைத்தவன் போர்த்துக்கீசிய படைத் தலைவன் அல்புகார்க்.
4.   தெய்வநாயகம் செட்டியார் என்பவர் யார்?
மலாக்காவில் கப்பலோட்டிய மூத்த தமிழரே (தெய்வநாயகம் செட்டியார்) இவரே 1781இல் முதல் தமிழர் கோயிலை மலாக்காவில் கட்டினார். அக்கோயில் இன்றும் மலாக்காவில் உள்ளது.
5.   ஶ்ரீலானாங் என்பவர் யார்?
1612 இல் முதல் மலாய் இலக்கியமான ‘செஜாரா மலாயு’ என்ற மலாய் மன்னர்களின் வரலாற்றினை எழுதியவர் துன் ஶ்ரீலானாங் என்பவர்.


6.   இஞ்சி செட்டியார் என்பவர் யார்?
1600களில் இஞ்சி செட்டியார் என்பவர் இயந்திரக் கலங்களில் அதிகப் பணியாட்களுடன் மலாக்காவுக்கு வந்துள்ளார். செங்கல் வீடு அமைப்பு, துறைமுகச் செப்பம், ஆலை நிறுவுதல், செக்காடுகல், மாட்டு வண்டி செய்தல் முதலிய பல தொழில்களை அறிமுகப்படுத்திய வணிகராவார்.
7.   குடியேற்ற நுழைவு நிதியின் வரலாறு பற்றிச் சுருக்கி எழுதுக
1907க்கு முன்பு இந்தியத் தொழிலாளர்கள் தனித்தனித் தோட்டங்களில் அவரவர் சொந்தச் செலவிலேயே சேர்க்கப்பட்டனர். 1907 இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்க் குடியேற்றக்காரர்களின் நிதியால் (Tamil Labourers Fund) எல்லாத் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தலும் அவர்களை மீண்டும் சொந்த நாட்டிற்கே திரும்ப அனுப்பி வைப்பதற்கான செலவையும் எல்லா முதலாளிமாரும் பொறுப்பேற்பதை விரிவுபடுத்தச் செய்வதுவே இதன் அடிப்படை நோக்கமாகும். இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இங்குவர ஊக்குவித்தலும், இங்கு அவர்களுக்கு ஏற்படுகின்ற செலவினங்களை முதலாளிமார் ஏற்பதுவும் குடியேற்ற நுழைவு நிதியின் அமைப்பு முறையாகும்.
8.   தமிழ்க்கல்வி எப்போது எவ்வாறு தொடங்கப்பட்டது?
தொழிலாளரின் பிள்ளைகளுக்குத் தாய்மொழிப் படிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சூழல் தொடுவாய்க் குடிநுழைவுப் பகுதிகளான பினாங்கு, சிங்கப்பூர், மலாக்கா ஆகிய இடங்களில்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற படிப்புக்கான ஏற்பாடு பினாங்கில் 21/10/1816 இல் தொடங்கியது. பின்னர் இலவய ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் வகுப்புப் பிரிவு புகுத்தப்பட்டது. 1850க்குப் பின்னரே இது சிறப்பாக அமைக்கப்பட்டு அரசாங்கத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கவே இத்தகைய தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இது போன்றே ஈப்போவிலும் 1895 இல் வகுப்புகள் ஏற்பட்டன. முதன் முதலில் நகரப் பகுதிகளில்தாம் வகுப்புகள் உருவாகின.
முதலாவது தமிழ்ப்பள்ளியானது மலாக்கா அரசின் உதவியுடன் ஒரு சிறிய கட்டடத்தில் 1850 இல் அமைந்தது. சிங்கப்பூரிலும் அவ்வாறே அமைந்தது. 1859 இல் தமிழகத்திலிருந்து பாடப் புத்தகங்கள் தருவிக்கப்பட்டு இங்குப் போதிக்கப்பட்டன.
‘டிராங்குரா’ என்னும் மலாக்காவிலுள்ள தரங்கம்பாடி எனுமிடத்திலும் 1/3/1864 இல் தமிழ்ப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. பினாங்குக்கு அருகில் நிபோங் திபால் எனுமிடத்தில் அரசாங்க ஆதரவுடன் தமிழ்ப்பள்ளித் தொடங்கப்பட்டது. தனியார் எவரும் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கவில்லை
இவ்வாறு நகராண்மைக்கழகத் தொழிலாளர் குழந்தைகள் பயில்வதற்காகவே தமிழ்ப்பாட போதனைகளைப் பலவிடங்களில் நடத்தினர். பின்னர்தான் தோட்டப் பகுதிகளிலும் தமிழ்க்கல்வி ஏற்பட்டது.
1930 முதல் கண்காணிப்பாளர்களைக் கொண்ட கல்வித்துறை ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அது படிப்படியாக முறைப்படுத்தப்பட்டு 1937 இல் தமிழ்க் கல்வித்துறையினை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பின்னரே தமிழே பயிற்சி மொழியாகவும் தமிழில் கல்விப்பாடங்களைப் படிப்பிக்கும் திட்டத்துடன் தமிழ்ப்பள்ளியும் கல்வியும் வளர்ந்தன.
9.   புதிய கல்விக் கொள்கையைப் பரந்துரைச் (பிரகடனம்) செய்தவர் யார்? அவர் செய்த தவறு யாது?
கிளைவ் துரைசிங்கம் என்பவரே புதிய கல்விக் கொள்கையைப் பிரகடனம் செய்தார். மலாயா சிலோனிய காங்கிரசு தலைவராக இருந்தார். சிலோனியர் நாங்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்கின்றோம் என்று ஆங்கிலேயரிடம் கூறி அரசாங்கத்துறைகளில் இடம்பெற்றனர். 1951 முதல் 1954 வரை ஐந்தாண்டுக்காலம் இங்கு இவர்களது ஆதிக்கக்கொடி பறந்தது.
1951 இல் சுயாட்சி சட்டமன்றமும், நியமன பெடரல் பேரவையும் மலாயா கூட்டரசாங்கத்தால் நியமிக்கப்பட்டபோது ம.இ.கா அதில் சேர மறுத்துவிட்டதால் சட்டமன்ற நியமன உறுப்பியம் பெற்ற மலாயா சிலோனிய காங்கிரசு தலைவர் டத்தோ கிளைவ் துரைசிங்கம் ஐந்தாண்டுக்குக் கல்வி அமைச்சரானார்.
இவர் காலத்தில் அரசு நியமனப் பொறுப்புகளில் யாழ்ப்பாணத் தமிழர்கள் பெரும்பான்மையோர் அமர்ந்து, கல்வித்துறை, கணக்குத்துறை, போக்குவரத்து அமைச்சு, சட்டத்துறை ஆகியவற்றில் மேலாண்மை செய்தனர். தமிழறியாத இவர்களுள் பலர் (ஆங்கிலக் கல்வியாளர்கள்) தமிழ்க் கல்வித்துறைக்கும் வந்துவிட்டனர்.
‘’ஆங்கிலத்தையும் மலாய் மொழியையும் கட்டாயம் படியுங்கள். தாய்மொழிகளை வீட்டிலும் கோயிலிலும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் இவர். இதனை வேதவாக்காகக் கடைப்பிடித்துக் கொண்டு முன்னேறினர் ஈழவர்கள். இலங்கையில் செய்த அதே தவறுகளை இங்கும் செய்தனர்.
10. மலாய் நாட்டில் தமிழர் திருநாள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது? விளக்குக.
1951 முதல் ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாளில் தமிழர் பண்பாட்டு விழா, தமிழர் இல்லத்தில் கலாசார அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருவது போல், தமிழ் இன ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ‘தமிழர் திருநாள்’ கொண்டாடப்பட்டு வருவது குறிப்படத்தக்கதாகும். இவ்விழாவின் வழி நாடெங்கும் நகரங்களில் தமிழ்ப்பண்பாட்டையும், கலைகளையும், இலக்கியத்தையும் வளர்த்து வந்தது சிறப்பான வரலாறாகும். சிங்கப்பூரில் தமிழ் முரசும் தமிழர் அமைப்புகளும் இதனை ஆண்டுதோறும் வளர்த்து வந்தன. மலேசியாவில் சில ஊர்களில் இந்த விழாவினை இன்றளவும் நடத்தி வருகின்றனர்.
இவ்விழாவில் சமூகச் சீர்திருத்தம், வாழ்க்கைச் செப்பம், மூட நம்பிக்கையினைப் புறக்கணித்தல் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயல் – இசை – கூத்து எனப்படும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் பேச்சு, எழுத்து, நடனம், விளையாட்டு, கலை, கைவினை போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களை ஏடு அறியவும் செய்தன.
பிற இன மக்களோடு தொழில், அறிவியல் போன்ற துறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான தூண்டுதலும் நோக்கமாகக் கொண்டு தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழவேள் கோ. சாரங்கபாணியார் ‘தமிழர் திருநாள்’ தந்தையெனப் போற்றப்படுகின்றார்.
11. 1960 இல் பஞ்சாபியர் கோலாலம்பூரில் கூடிப் பேசி எடுத்த முடிவும் கோரிக்கையும் யாவை?
1947 க்குப் பின்னர் பஞ்சாபியர் பத்தாயிரம் பேர் மலாயாவில் இருந்தனர். மெரும்பாலோர் செட்டியார்களிடம் கடனுக்குக் குறைந்த வட்டியில் பணம் வாங்கிக் கூடுதல் வட்டிக்குத் தமிழர்களிடமும் மலாய்க்காரர்களிடமும் தொழில் செய்துகொண்டே காவல் (ஜாகா) பணிகளையும் செய்தனர். அரசாங்கம் மற்றும் வைப்பகக்கட்டடங்களில் பஞ்சாபியர் (சீக்கியர்) காவல் காத்தனர்.
நகரத்தார்களின் வட்டிக்கடைகளிலும் வைப்பகங்களிலும் ஒன்றரை முதல் மூன்று விழுக்காட்டளவிற்கு வட்டிக்குக் கடன் வாங்கி வெளியில் பத்து முதல் இருபது காசு வரை வட்டிக்குக் கொடுத்துத் தம் வளத்தைப் பெருக்கிக் கொண்டனர். அசலை வாங்காது வட்டியை மட்டும் மாதாமாதம் கறப்பது இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.
இவ்வாறு தனித்திறனுடன் சொத்துடைமைகளை மலாயாவில் வளர்த்துக் கொண்ட பஞ்சாபியர் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ‘பஞ்சாபியர் சங்கம்’ ஒன்றை அமைத்துக் கொண்டு இங்கே வேரூன்றினர். 1960 இல் பஞ்சாபியர் தேசியக் கழகத்தின் அமைப்பு வாயிலாக நேரு அரசாங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் முறையீட்டினை அனுப்பி வைத்தனர். அந்தத் தீர்மானம் ‘பஞ்சாபி தனிமாநிலம்’ கோரிக்கையை வலியுறுத்தியது.

மலாயாவிலும் சிங்கப்பூரிலும் (அறுபதாயிரம்) பஞ்சாபியர் ஒன்றுகூடி ஒரே குரலில் 1960 இல் கூடிப் பேசி எடுத்த முடிவில் ஐந்து கோட்பாடுகள் பின்வருமாறு:-
1.  இந்தியாவில் வாழும் 70 இலக்கம் சீக்கியர்களின் நாடாக பஞ்சாபி மாநிலம் பிரகடனம் செய்யப்படவேண்டும்.

2.  நீதியும் பாதுகாப்பும் சமத்துவமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்

3.  மொழிவழி இனவுரிமைகளுக்கு உத்தரவாதமிக்க சட்டம் வேண்டும்

4.  இழந்த உடைமைகள் திருப்பித்தரப்பட வேண்டும்.

5.  பஞ்சாபியர்க்கு எதிராகப் பாரபட்சமற்ற கொள்கையோ திட்டமோ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் கடைப்பிடிக்கக் கூடாது.

(குறிப்பு: இந்திய தலைமையமைச்சர் நேருக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டது).


1986 இல் உலகளாவிய பஞ்சாபியர் உலக இயக்கங்களுடன் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக ஓர் அறிவிப்புச் செய்தனர். அந்தப் பரிந்துரை யாதெனில்:
‘’நாங்கள் இந்தியர்களுமல்லர்; இந்துக்களுமல்லர்’’ என்பதேயாகும்.
இவர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் தங்களின் மொழி, சமயம், இனம், மரபு, பண்பாடு ஆகிய முழுத் தோற்றங்களுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் வல்லமைப் படைத்தவர்களாக இருக்கின்றனர்.
12. துன் சம்பந்தனாரின் அரும்பெருஞ் சாதனை எது?
துன் சம்பந்தனார் 18 ஆண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தார். அவர் செய்த மாபெருஞ் சாதனை 1960களில் தோட்டந் தோட்டமாகச் சென்று பத்துப் பத்து வெள்ளியாகச் சேர்த்து, தொழிலாளர் பல்லாயிரம் பேர் உறுப்பினராகக்கூடிய தேசிய நிலநிதிக் கூட்டுறவுக் கழகத்தை உருவாக்கியதே! பலகோடி வெள்ளி மூலதனத்துடன் இதனை அரும்பாடுபட்டு, மலேசிய இந்தியர் காங்கிரசின் சாதனையாகப் படைத்தார்.
13. தமிழர் குடியிருப்புப் பகுதி முதலில் எங்கே ஓர் ஊராகத் தொடங்கப்பட்டது?
மலாயா தோட்டத்துறையில் ஒப்பந்த வேலை முடிந்தவர்களுக்கு நிலம் வழங்கி அதில் வீடும் பயிரிட்டுக்கொள்ள நிலமும் ஒதுக்கித் தரக் கோரிய வேண்டுகோளுக்கு முதலாளிமார் சிலர் உடன் பட்டனர். அவ்வகையில், முதல் தமிழர் குடியிருப்புப் பேட்டை ஓர் ஊராக, பேராவில் பாகன் செராய் எனுமிடத்தில் வழங்கப்பட்டது. இது 1884 இல் எழுநூறு (700) ஏக்கர் நிலத்தில் 400 பேர்களுக்கு வழங்கப்பட்டது. இதன்வழி ஒரு குடும்பத்தார்க்கு ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது.
இவ்வாறே நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் என்ற சுவாவில் 243 ஏக்கரில் 1932 இல் இது அமைத்துத் தரப்பட்டது. இராமநாதபுரத் தமிழர் அவர்தம் தமிழக மாவட்டப் பெயரையே இங்கு வைத்தனர். தோட்டத்தில் 20 ஆண்டுகள் வேலை செய்தவர்க்கே இத்திட்டத்தில் இடங் கொடுக்கப்பட்டது.
14. சயாம் மரண இரயில்வே கொடூரத்தை விளக்குக.
சப்பானியன் வருவதற்கு முன்னால் வெள்ளைக்காரனின் ஆட்சியில் முதன் முதலில் ஈயம், ரப்பர் ஏற்றுமதிக்கான தொடர்வண்டிப் பாதை எட்டு மைல் தூரத்தில் தைப்பிங் – போர்ட் வெல்ட் ‘ரயில் ரோடு’ போடப்பட்டது. 1885 இல் போடப்பட்ட இதுவே முதல் இரயில் வழி. இரயில் தண்டவாள நிருமாணிப்பு அச்சமயம் மிகவும் கொடூரமானது. ரப்பரே அப்பாதை வழியாகக் கடல் முகக் கப்பலுக்குக் கொண்டு போய் ஏற்றுமதிச் செய்யப்பட்டது. 1886 இல் கோலாலம்பூர் – கிள்ளான் இரயில் பாதை திறக்கப்பட்டது. மிகக் கடின உழைப்பான இதற்குத் தமிழ்த் தொழிலாளர் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். பயங்கரக் காட்டுப் பகுதிகளை அழித்து சாலைகளைச் செப்பனிடவும், அதில் இரயில் பாதைகளை அமைக்க ‘மலாயன் இரயில்வே’ என்ற அரசு நிறுவனம் அமைக்கப்பட்டது.
தொழிலாளர்களைப் பகல் முழுவதும் வேலை வாங்க ஆங்கில அதிகாரியும் யாழ்ப்பாணக் கிராணியும் அமர்த்தப்பட்ட ஈவிரக்கமின்றி நடந்து கொண்டனர். இரவு பகலாக வேலை வாங்கப் பட்டதாலும் உழைப்பாளிக்குச் சத்துணவில்லாததாலும், பாசாத் தண்ணீரைப் பருகியதாலும் வயிறு வீங்கியும் கொசுக்கடியாலும் யானைக்கால் நோயும், காய்ச்சக்கட்டி நோயும் ஏற்பட்டுப் பெரும்பாலோர் மாண்டனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஓர் இலக்கத்துக்கும் மேலாக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது. வெள்ளைக்காரனின் ஆட்சியில் மலாயன் ரயில்வேயின் மரணவழிப்பாதை போட்ட இக்காலக்கட்டத்தில் மாண்டு மடிந்தவர்களுக்கு இழப்பீடோ, அவர்தம் குடும்பத்துக்கு நட்ட ஈடோ வழங்கப்படவேயில்லை. கிம்மாசுக்கு செல்லும் கிழக்கு முக இரயில் பாதை அமைப்பே மிகக் கொடூரமான காட்டு மலைப்பகுதியாகும். இங்குச் சுங்கை உஜோங்கில் படு பயங்கரப் பள்ளமும் நெடுங்குன்றங்களும் பல திருப்பங்களும் அமைந்த இரயில் பாதை அப்பொழுது போடப்பபட்டது. இப்பகுதியில்தான் மிக மிக அதிகமான தொழிலாளர்களைப் பலி கொடுத்த இடமாகும். 1885 முதல் 1930 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த கொடூரச் சாவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

மலாயா நாட்டில் சப்பானியர் ஆட்சி இருண்ட காலமாகும். வடக்கே பெர்லிசுக்கும் வடபுலம் நோக்கி 428 கிலோ மீட்டர் வரை செப்பனிடவும், இந்த இரயில் பாதை மூலம் கிழக்கிந்தியாவின் வட பகுதிக்குத் தொடர்பு கொண்டு இந்தியாவைத் தரை மார்க்கமாகத் தாக்குவது என்பது சப்பானியர் திட்டம். 60 ஆயிரம் தொழிலாளர்களுள் பெரும்பாலோர் தமிழர், 1943 இல் சயாம் மரண இரயில்வே போட கொண்டு செல்லப்பட்டனர். தோட்டப்புறங்களிலிருந்த ஆண்மக்களை எல்லாம் வண்டிகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சப்பானியர் சென்றனர். சப்பானியக் கொடூரத்திலும் விபரீதத்தாலும் மாண்டு மடிந்தவர் மிகுதி. (நூல் பக்கம் 100 / 101 / 102).https://www.facebook.com/tikpanbaham/

No comments:

Post a Comment