04 December 2016

தாய்க் கொலை முனைவர் இரா. திருமுருகன்

1.0 கல்விமுறையில் உள்ள குறை

      ‘’தாய்க்கொலை புரிவதா தமிழர் வீரம்?’’
(திரு. வி. க. - சீர்திருத்தம்.)
இன்றைய தமிழ் மொழியின் தரம்
   தமிழ்மொழியின் தரம் இன்று எல்லா மட்டத்திலும் வருத்தப்படும் அளவுக்குத் தாழ்ந்துவிட்டது. ஒலி வடிவிலோ வரி வடிவிலோ வெளியிடப்படும் தமிழ், பிழைகளும் பிற மொழிச் சொற்களும் மலிந்ததாக உள்ளது. தமிழுக்குத் தாய்நிலமாக உள்ள தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவும் நூல்களும் இதழ்களும் இப்படி இருந்தால், தமிழ் எப்படித் தரமான மொழியாக வளர முடியும்?
தமிழ் எழுத்தாளர்கள்
   ‘மில்கள் வந்தது’ ‘தடுத்து நிறுத்தும் ஒவ்வொரு தடுதலும்’ ‘பழையன கழிகிறது’ ‘சம்மந்தமாக’ ‘துரத்தியை ஊதி’ ‘சுத்த மத்திபம்’ ‘கத்திரிக்கோல்’.
                                    (கி. இராசநாராயணன், கணையாழி, பிப். 90)
   ‘பள்ளிக்கூட _ தலைமையாசிரியர்’ ‘மனோத்தத்துவம் பற்றி - தனக்கு - தெரிந்ததை’ ‘பின்னணியை - புரிந்து கொண்ட’ ‘இந்த - பரிசு’ ‘ஒரு தோழரை மனநோயிலிருந்து மீட்டிய அனுபவம்’
                                          (சு. சமுத்திரம், சுபமங்களா, மார்ச் 92)
   ‘சீர்மைக்கப்பல்’ ‘அதுகளை’ ‘பலது’
                                          (பிரபஞ்சன், தினமணி கதிர், 1.3.92)
   ‘பதறுகள் சிதறத் தூற்றி நெல் அளப்பது’ ‘பசு யென்றாலும்’
                                          (பிரபஞ்சன், மேலது, 22.3.92)
   ‘அறும் பெருங்காப்பியமாகவும், அறுஞ்சிறு காப்பியமாகவும் முன் உள்ளவை தொகுக்கப்பட்டிருந்தால்’
                                         (திருப்பூர்க் கிருஷ்ணன், கணையாழி, பிப் 90)
இவற்றில் மலிந்துள்ள எழுத்துச் சொற்பிழைகளைப் பாருங்கள்
‘ஜூனியர் போஸ்ட்’ ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ ‘சினி விசிட்’ ‘சாம்பியன்’ ‘ஜாப் கைடு லைன்ஸ்’ ‘இந்தியா டு டே’ இவை இன்றைய தமிழ் இதழ்களின் பெயர்கள்!
‘போடா ஃபூல்’ (ஞானரதம், 2/72) ‘Image” (கணையாழி, சன.91) இவை தமிழ்ப்  ‘புதுமையான’ தலைப்புகள்.
‘கவர் ஸ்டோரி’ ‘லைட்ஸ் ஆன்’ இவை தமிழ் இதழ்களில் காணப்படும் பகுதித் தலைப்புகள்! “The trend today is ஒரே மூச்சில் படத்தை முடிப்பது’ (வினோத், குமுதம், 19.3.92) ஆங்கிலத்தை அளவுக்கு மீறிப் படித்துவிட்டவர் படைக்கும் ‘அர்த்தநாரித் தொடரன் இது!
‘கணையாழி magazine இல் புதுடில்லி Literary group ஆன இலக்கிய வாசகர் வட்டத்தின் meeting களில் நடக்கும் discussion களில் அளவுக்கு மீறி Tamil word and phrases பயன்படுத்துவது critical capacity க்கு முற்றிலும் contradictory ஆக இருக்கிறது என்பதே என்னுடைய impression’
                                        (சிட்டி, கணையாழி, சன. 91)
இது 20-ஆம் நூற்றாண்டின் ‘மணிப்பிரவாளம்’. தமிழும் ஆங்கிலமும் தணியாக் காதல் கொண்டு தழுவிக் குழையும் இந்த நடையைத் ‘தமிங்கில நடை’ என்றும் அழைக்கலாம்!
‘‘ஐ டிட் சோ மச் சோ மச், ஐ நோ தெட் ஆல் அஸ் மேட் மீ கம் உறியர் ஹோ, யூ மஸ்ட் அன்டர்ஸ்டான்ட். ஐ ஏம் நாட் த ரைட் பெர்சன் போர் ஆல் தீஸ்’’
                                 (பேரை சுப்பிரமணியம், ஞானரதம் பிப்.72)
இதுபோல் எழுதுவது பற்றிய பாரதியார் கருத்தை இவ்விடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாயிருக்கும்:
‘இங்கிலாந்து பிரான்ஸ் முதலான தேசங்களில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு, அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலே முழுவதும் தமிழ்நடையை விட்டு, இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் வினோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது.’ (பாரதியார் கட்டுரைகள் ப.267).
‘இங்கிலீஷ் படித்த தமிழ்மக்கள் தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டும்’ (மேலது, ப. 264)
70 ஆண்டுகளுக்குமுன் பாரதியார் எழுதி வருந்திய நிலைமை, இன்னும் தொடர்கிறது என்று சொல்லுவதுகூடச் சரியாயிருக்காது, மேலும் சீர்கெட்டு வருகிறது.
பாட நூல்களைவிட இத்தகைய இதழ்களை மிகுதியாகப் படிக்கும் வாய்ப்புள்ள இளைஞர்தம் மொழித்திறன் எப்படிக் கெடாமல் இருக்கும்?
மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாயிருக்கலாம், அவர்களின் படைப்புகள் போற்றத்தக்க இலக்கியங்களாயிருக்கலாம். என் கருத்துகள் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றியன அல்ல. எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றியனவே. அவர்களின் படைப்புத்திறனில் நான் பழுது சொல்லவில்லை, நான் கவலைப்படுவதெல்லாம் அவர்களின் மொழித்திறன் பற்றியே. காரணம், மக்கள் வாழ்வில் மட்டுமல்ல, மொழி வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை அவர்களின் எழுத்துகள் என்பதே.
வானொலி தொலைக்காட்சிகள்
‘இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது’ ‘நலங்கில்லி நெடுங்கில்லியின் கோட்டையை முட்றுகை இட்டான்’ என்பனபோன்ற பிழைகளையும் ஒலிக்கொலைகளையும், வானொலியும் தொலைக்காட்சியும் ஒலிபரப்பிக்கொண்டிருக்கின்றன. இவற்றை நாள்தோறும் கேட்டுப்பழகும் குழந்தைகளின் மொழித்திறன் எப்படி நல்ல வண்ணம் வளரும்?
திரைப்படத்துறை
‘காக்கிசட்டை’ ‘தூறல் நின்னு போச்சு’ ‘பூக்களை பறிக்காதீர்’ முதலிய இலக்கணப்பிழையுள்ள திரைப்பட தலைப்புகளைக் கொட்டை எழுத்துகளில், சுவரொட்டிகளில் அடுக்கடி பார்த்துச்செல்லும் குழுந்தைகளின் மொழித் திறன் எப்படிக் கெடாமல் இருக்கும்? ‘பூவிலே சிறந்த பூ என்ன பூ?’ என்ற வினாவுக்கு, ‘அன்பு’ என்ற விடையைத் தரும் திரைப்படப்பாடலை அடிக்கடி கேட்கும் சிறுவர்கள், ‘அன்பு’ என்ற சொல்லை ‘அன்பூ’ என்று எழுதுவதில் என்ன வியப்பு?
மாணவர்கள்
மொழியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவரின் கட்டுரையிலிருந்து சில தொடர்களை அடியில் தருகிறேன். தமிழ் மொழிக்கல்வியில் முதிர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் அவர்தம் மொழித்திறன் எப்படியிருக்கிறதென்று பாருங்கள்: ‘நூற்றுக்கணக்காணப் பாடல்கள்’ ‘அறிதிட்டுக் கூற’ ‘என்பது தின்னம்’ ‘கெட்கும் ஒலி’ ‘உழைப்பினுடேயும்’ ‘சீறும் சிறப்பும் மிக்க’ ‘தொழிற் மேற்கொள்ளுதல்’ ‘தெளிவுப்படுத்துக்கிறது’ ‘கருவினை களைக்க’ ‘ஓரரிவுள்ள’ (நம்பமுடியவில்லை எனினும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது உண்மை.) இத்தகையோரே பேராசிரியர்களாக வந்து, மாணவர்களுக்கு மொழியியலும் இலக்கணமும் கற்பிக்கும் நிலை இருக்கிறது. அவர்களிடமிருந்து கற்கும் இளைஞர்களின் மொழித்திறன் எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.
காரணம் என்ன?
இவ்வளவுக்கும் உரிய காரணங்களில் நம் கல்வி முறையில் உள்ள குறைபாடும் ஒன்று. மொழித்திறனை வளர்க்கும் வகையில் நம் தமிழ்க் கல்விமுறை இல்லை. இதனை இன்னும் சற்று விரித்துக் கூறினால், தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில், இன்றைய இளைஞர்களுக்கு ‘அளிக்கப்படும் தமிழ் இலக்கணக் கல்விக்குரிய பாடப்பொருள், பாடநூல்கள், பயிற்றுமுறை, மதிப்பீட்டுமுறை முதலியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இவையனைத்தும் இலக்கணத்தை ஒரு கசப்பான பாடமாகச் செய்துவிட்டன. இதனை வேண்டா வெறுப்பாகக் கற்ற பலர்க்கு இலக்கணத்தில் தெளிவான அறிவோ, அதை கற்பிப்பதில் ஆர்வமோ இல்லை. ‘’தேர்வில் இப்படி வினா வந்தால் இப்படி விடை எழுதுங்கள்’’ என்று தம் மாணவர்க்கு வினாவிடைச் சொல்வதெழுதல்கள் தருவதாக மட்டுமே இவர்களின் பணி இருக்கிறது. இவ்வழியில் தேர்வில் வெற்றி பெற்றோரே பின்னர் இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியர்களாக வருகின்றனர். இவ்வட்டம் சுழன்றுகொண்டே இருக்கிறது.
1.    பாடப்பொருள்  : இன்றைய மொழிக்கு வேண்டாதனவும், உணர்தற்கு அரியனவுமான இலக்கணக் குப்பைகள் சிறுவர்தம் தலையில் திணிக்கப்படுகின்றன. காட்டாக:
1.   சிறு வகுப்புகளில் உகரச்சுட்டைக் கற்பித்தாக வேண்டுமா? உவன், உவ்வீடு முதலிய காட்டுகளைக் கொண்டு அதனை எப்படிக் கற்பிக்கமுடியும்?
2.   எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒற்றளபெடை (தமிழ் இலக்கணம், ப.7), குற்றியலிகரம் (ப.13) ஆகியவற்றில் இலக்கணங்கள் தேவையா?
3.   செய்பு, செய்யூ, செய்தென, செய்யிய, செய்யியர், செய்பாக்கு ஆகிய வினையெச்ச வாய்படுகள் பற்றிய இலக்கணம் சிறுவர்களுக்கு வேண்டுமா? (10ஆம் வகுப்பு, ப 9)
4.   நாலசைச்சீர்களின் இலக்கணம் 9-ஆம் வகுப்பு மாணவர்க்குக் கட்டாயம் தெரிந்தாக வேண்டுமா? (ப.71)
5.   மருண்ம், போன்ம் ஆகியவற்றில் உள்ள மகரக் குறுக்கமும் மொழிமாற்று, யூட்டுவில், தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு ஆகிய பொருள்கோள் இலக்கணங்கள் (ப.19) வெற்பன், ஊரன், சேர்ப்பன், தினை, சாமை, வரகு, அகில், காஞ்சி, காயா, ஞாழல், ஓமை, தொண்டகம், துடி, நிரை கவர்தல் முதலிய கருப்பொருள்கள், (ப.44) உழிஞை, நொச்சி, கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றின் விளக்கங்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய நிலையில் தேவைதானா?
6.   உரிச்சொல்லின் பெயர்க்காரணம் ஆராய்ச்சியாளர்க்கே பிடிபடாத நிலையில் இருக்க 4-ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கு அது தேவையா?
2.   பாடநூல்கள் : தரமும் கவர்ச்சியுமற்ற இலக்கணப் பாடநூல்கள் இளைஞர்கள்
கையில் தரப்படுகின்றன. மேனாட்டு இலக்கண நூல்களில், வண்ண எழுத்துகளும், கோட்டுப்படங்களும் நிரம்பக் காணப்படும். தமிழ் இலக்கணப் பாடநூல்கள் எழுத்து வேறுபாடுகளும் இன்றி நெடுங்கதைபோல் அச்சிடப்படுகின்றன. 
பழைய காட்டுகள்
காரண இடுகுறிப்பெயர்க்கு, வழக்கமான முக்கண்ணன், முள்ளி, என்பவற்றை விட்டு, நாற்காலி என்பதுபோல் புதிய காட்டுகள் தருதல் விரும்பத்தக்கது. காலவாகு பெயர்க்குக் ‘கார்த்திகை பூத்தது’ என்பதிலும் ‘திசம்பர் பூத்தது’ என்று காட்டுத் தருதல் நல்லது.
இலக்கணச்செய்திகளை எஞ்சாது கூறுதல்
குறிப்பிட்டதொரு இலக்கணப்பொருள் பற்றி இன்று வரையில் தமிழ் இலக்கண நூல்களில் என்னென்ன நுட்பங்கள் கூறப்பட்டுள்ளனவோ அவை அனைத்தையும் எஞ்சாமல் தந்துவிடுதல் என்ற போக்கும் காணப்படுகிறது. காட்டாகப் பத்தாம் வகுப்பு இலக்கணநூலில், உவம உருபுகள் என்ற தலைப்பில், போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன எனப் பவணந்தியார் கூறிய உருபுகளையெல்லாம் கொடுத்து, உரிய நூற்பாவையும் கொடுத்து, பயிற்சி வினாவில், நூற்பாவில் பிறவும் என்பதால் கொள்ளப்படும் உவம உருபுகள் யாவை? என்றும் கேட்கப்படுகிறது. (பிறவும் என்பதால் கொள்ளப்படும் உருபுகள் பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கான விடையை மாணவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை). போல, ஒப்ப, அன்ன என்பவற்றை மட்டும் இவ்வகுப்பில் கற்பித்துப் பிறவற்றை மேல் வகுப்புகளில் கற்பிக்கலாம்.
3.    பயிற்றுமுறை : இலக்கணம் பயிற்று முறையில் கவர்ச்சியில்லை. பெரும்பாலும் விதிவிளக்க முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. சில வகுப்புகளில் இலக்கணப்பாடநூல் துணைப்பாடநூல் போல் படிக்கப்படுகிறது. காட்டாக, ‘தனிக்குறிலைச் சாராத மொழிகளின் கடையில் வல்லின மெய்யை ஊர்ந்துவரும் உகரம் குற்றியலுகரம்’ என்று சொன்னால், மாணவனுக்குத் தலையைச் சுற்றுகிறது. எடுத்துக்காட்டுகளைக்கொண்டு மாணவர்களே விதியை உருவாக்குமாறு செய்தல் சிறந்த முறையாகும். இளைஞர்களுக்குத் திரைப்படத்தில் உள்ள கவர்ச்சியைப் பயன்படுத்திச் சில இலக்கணச்செய்திகளைச் சுவையாகக் கற்பிக்கலாம். தண்ணீர் தண்ணீர்- அடுக்குத்தொடர், மூடுபணி- வினைத்தொகை, ஆடு புலி- உம்மைத்தொகை இப்படிப் பல பயன்பாடும். ‘சிகப்பு மனிதன்’ முதலிய பிழையான திரைப்படப் பெயர்களைக் கொண்டு திருத்தச் செய்யலாம்
‘உயிர் வரின் உக்குறள் மெய்விட் டோடும். யவ்வரின் இய்யாம்’ (நன். 164) என்பதை, குறைந்த உகரம் குறையாத உயிர் வந்தால், இருந்த இடத்தைவிட்டு எழுந்து ஓடுகிறது. தன்னைப்போல் அரை மாத்திரை உள்ள யகரத்தைக் கண்டால், ஓடாமல் அதற்குத்தக்கபடி மாறி ‘இ’ என்று இளித்துக்கொண்டு நிற்கிறது என்று நகைச்சுவையாக விளக்கலாம்.

4.    மதிப்பீட்டு முறை : பெரிதும் பயன்படாத செய்திகளுக்குத் தேர்வு வினாக்களில் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. கற்பித்தவற்றில் இன்றியமையாதவற்றை மட்டுமே தேர்வுகளில் வினவுவது முறை. காட்டாக,
அ) பகுபத உறுப்பிலக்கணம் கூறுதல் என்பது 12ஆம் வகுப்புவரையில் வினவப்படுகிறது. சொற்களைப் பகுத்தாய்வு செய்தல், மொழியியல் ஆய்வாளர்க்குத் தேவைப்படலாம். இளைஞர்களுக்கு இன்றியமையாததா? மேலும் இதைக் கற்பிப்பதில் பல குழப்பங்களுக்கு இடமிருக்கிறது. அறிவியல் முறைப்படிக் கற்பிப்பதில் சில இடர்ப்பாடுகள் உள்ளன.
     நடந்தான் என்பதில், த் சந்தி, அது ந் ஆனது விகாரம். அதுபோல சென்றான் என்பதில், ல்-ன் ஆனது விகாரம் என்று கற்பிக்கப்படுகிறது. விகாரம் என்பன, வலித்தல் மெலித்தல் முதலியன 9 செய்யுள் விகாரங்களே. வல்லொற்றுத் தன் இன மெல்லொற்றாவதே மெலித்தல். இடையொற்று மெல்லொற்றாவது (ல்-ன் ஆவது) என்ன விகாரம்?
     அடித்து (வெளுத்தான்) என்பதில் உ-வினையெச்ச விகுதி என்றும், அடித்துக்கொண்டான் என்பதில் து சாரியை என்றும் கற்பிக்கப்படுகின்றன. இது முறைதான?
     பெற்றான் என்பதில் பகுதி ஒற்று இரட்டி இறந்த காலம் காட்டியது என்றும், பெற்றால் என்பதில் ஆல் என்னும் எதிர் காலவிகுதி காலங்காட்டுகிறது என்றும் கற்பிக்கப்படுகிறது. அப்படியானால், பெற்றால் என்பதில் பகுதி ஒற்றிரட்டியது ஏன்?
ஆ) மேனிலைப்பள்ளிகளில் இலக்கணம் தனிப்பாடமாக இல்லை. நடைமுறை இலக்கணமே கற்பிக்கப்படுகிறது. ஆனால் தேர்வு வினாக்களில், புணர்ச்சிவிதி கூறுக என்னும் வகை இடம்பெறுகிறது. புணர்ச்சிவிதி கூறுவதற்கு நன்னூற் புணர்ச்சிவிதி நூற்பாக்கள் அனைத்தும் மாணவர்க்கு மனப் பாடமாகத் தெரிந்திருக்கவேண்டும். முன் வகுப்புகளில்ல் அவை அத்தனையும் பாடநூல்களிலேயே இல்லை. இவ்வினாவுக்கு விடையளிப்பதில் மாணவர் பெரிதும் இடர்ப்படுகின்றனர். எனவே இவ்வினா வகை கைவிடப்படல் வேண்டும்
இ)  தேர்விகளில் இலக்கணப்பாடத்தில் மனப்பாடத் திறனும் பொருளறிவுமே மதிப்பிடப்படுகின்றன. மொழித் திறன் எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை மதிப்பிடுவதில்லை. மாணவன் இலக்கண வினாக்களுக்குச் சரியான விடையை எழுதியிருக்கிறானா என்று பார்ப்பதைவிட, அவன் எழுதிய எழுத்தில் இலக்கணம் இருக்கிறதா என்று பார்ப்பது சிறந்தது. அகர ஈற்றுப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் வரின் என்னவாகும்? என்ற வினாவுக்கு ஒரு மாணவன் ‘அகரத்தை இறுதியில் உடையப் பெயரெச்சத்தின் முன் வந்தக் கசத பக்கள் இயல்பாகும்’ என்று விடை எழுதினால் இலக்கண அறிவால் என்ன பயன்? மொழிப்பாடம் அனைத்திலும் பாடப்பொருளறிவை விட மாணவன் பெற்றிருக்கும் மொழித்திறனையே சிறப்பாக மதிப்பிட வேண்டும். காட்டாக, மொழிப்பாடத்தில் காந்தியடிகளைப் பற்றிய பாடத்தில், காந்தியடிகள் பிறந்த ஆண்டு எது என்று வினவப்படுவதாக வைத்துக்கொள்ளோம். அதற்கு எழுதப்படும் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்று கொள்வோம். ஒருவன், ‘காந்தியடிகள் பிறந்த ஆண்டு ‘ஆயிரத்தி என்னூத்தி அருவத்தி ஒம்பது’ என்று எழுதுகிறான் என்றால், அதற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுக்கலாம்? கருத்துச் சரியாக இருந்தாலும் மொழித்திறன் சற்று இல்லையாகையால் நான் இதற்கு 1 மதிப்பெண்தான் கொடுப்பேன். இதே வினா வரலாற்றுப்பாடத்தில் வினவப்பட்டு, இதேபோல் விடை எழுதப்பட்டிருந்தால், நானே இதற்கு 3 மதிப்பெண்கள் கொடுப்பேன். காரணம், மொழிப்பாடத்தில் மொழித்திறன் மதிப்பிடப்படவேண்டும், வரலாற்றுப்பாடத்தில் கருத்தறிவு மதிப்பிப்பட வேண்டும் என்பதே.
     இன்றைய 10, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுத் தமிழ்ப்பாட விடைத்தாள் மதிப்பீட்டில் ஒரு நெறிமுறை பின்பற்றப்படுகிறது. எவ்வளவு பிழை மலிந்திருந்தாலும், ஒரு விடைக்குரிய மதிப்பெண்ணில் 25%க்கு மேல் குறைக்கக் கூடாது என்பதே அது. இதன் படி மேலே காட்டிய விடைக்கு (மொழிப்பாடத்திலும்) 3 மதிப்பெண் கொடுத்தேயாக வேண்டும். இந்த நிலை இருப்பதால், மொழித்திறன் சிறிதும் இல்லாத மாணவன்கூடக் கருத்தளவில் சரியாக விடையெழுதி 75% மதிப்பெண்ணும் வாங்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.
இலக்கணக்கல்வி மேலும் சிறப்புறச் செய்யவேண்டுவன
1.   எளிய இலக்கணச்செய்திகளை மிகக் குறைந்த அளவே தொடக்க வகுப்புகளில் கற்பிக்கவேண்டும்.

2.   இக்காலத்தமிழுக்கு இன்றியமையாது தேவைப்படும் இலக்கணப்பகுதிகளுக்கு முதன்மை தந்து கற்பிக்க வேண்டும்.
3.   இலக்கணப்பாடநூற்கள் கவர்ச்சியுடையனவாகவும் விளக்கப்படங்கள், நிறைந்தும் இருக்கவேண்டும்.

4.   மொழிப்பாட மதிப்பீட்டில் மொழித்திறனுக்கு முதன்மை தரல் வேண்டும்.

5.   இலக்கணம் கற்பிக்குமுறை இனியதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்கவேண்டும்.

6.   இலக்கணக்கல்வியைப் பயனுள்ளதாக ஆக்க வல்லவை பயிற்சிகளே. இலக்கணப்பயிற்சிகளில் தலை சிறந்தது சொல்வதெழுதுதலே. (ஓர் உரைநடைப்பகுதியை ஆசிரியர் சொல்ல, மாணவர் கேட்டெழுதி, பிழைகளைத் திருத்தி, அப்பகுதியில் வினவப்படும் பல்வகை இலக்கண வினாக்களுக்கு விடை எழுதல் சொல்வதெழுதலாகும்) இப்பயிற்சி கைகண்ட பயன் தந்தமையைப் புதுச்சேரிக்காரர்கள் உணர்வார்கள். இது அடிக்கடி தரப்படல் வேண்டும். பயிற்சி இல்லாத இலக்கணக்கல்வி சிறிதும் கைகொடுக்காது.

7.   மொழி கற்பிக்கும் ஆசிரியர்கட்கு அடிக்கடி மறு பயிற்சி வகுப்புகள் நடத்தி, வல்லுநர்களைக்கொண்டு இலக்கணச் செய்திகளில் தெளிவினை ஏற்படுத்த வேண்டும். புதிய பயிற்றுமுறைகளைச் செய்துகாட்டவேண்டும்.

2.0 கற்றுவல்லோர் கடமை 
  
            கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே
                              கவின்செய் முல்லை
            அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே
                              அன்பே கட்டி
            இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்எழிலை
                              ஈட ழித்து
            வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல
                              வாய்ப தைக்கும்’
-    பாவேந்தர், தமிழியக்கம்-1
‘’நீங்க தம்ளரா’’? என்று மதுரைப் பக்கத்தார் கேட்கும் போது மற்றப் பகுதியார் திகைக்கின்றார்கள். ‘’பயம் என்னா வெல?’’ என்று செஞ்சிப் பக்கத்தார் கேட்கும்போது மற்றப் பகுதித் தமிழர் விளங்காமல் விழிக்கிறார்கள். ‘’பஸ்தண்ல மூஸ் கயுவ்னேன் ஜல்ப் புச்சிகிச்சி நயினா’’ என்று சென்னைக்காரன் சொல்வதைக் கேட்டு இவர்கள் இருவருமே சிண்டைப் புய்த்துக் கொள்கிறார்கள். ஏன்? தமிழர்கள் தமிழிலே பேசுவதைக் கேட்டுத் தமிழர்களே திகைப்பதற்குக் காரணம், இவை யாவும் பேச்சுத் தமிழில் வட்டார வழக்குகள். (தமிழைப் பேசுவது போலவே எழுத வேண்டும் என்பார்கள். இவர்களில் எந்த வட்டாரத்தார் பேசுவது போல என்பதை முடிவு செய்ய வேண்டும்) இந்தப் பேச்சு மொழிதான் இயற்கையான, உயிருள்ள மொழி என்றாலும், ஒருவர் பேசுவது மற்றவர்க்கு விளங்காததால், இவர்கள் அனைவர்க்குமே தெளிவாக விளங்கக்கூடிய ஒரு மொழி தேவைப்படுகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுவதுதான் எழுத்துமொழி. இதற்கு, ‘’நீங்கள் தமிழரா?’’, பழம் என்ன விலை?’’, ‘’பச்சைத் தண்ணீரில் முகத்தைப் கழுவினேன், சளி பிடித்துக்கொண்டது ஐயா’’ என்று பொதுவான எழுத்து வடிவம் கொடுத்துப் பயன்படுத்துவது கற்றோர்தம் ஏற்பாடே. எனவே எழுத்து மொழி செயற்கையானதுதான். அதைக் கண்டபடி சிதையாமல் காப்பற்றினால்தான் அது நல்ல கருவியாக அனைவர்க்கும் பயன்படும். எழுத்துமொழியைவிடப் பேச்சு மொழி செல்வாக்கு மிக்கதே. பெரும்பாலோரின் பேச்சு வழக்கில் ஒரு மாறுதல் தோன்றிக் கற்றுவல்லோரின் எழுத்து வழக்கிலும் அது நிலைபெற்றுவிட்டால், இலக்கணத்திலும் அதற்கு இடம் கிடைத்துவிடும். எனவே, ஓர் உயிருள்ள மொழியில் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்ந்தவண்ணம் இருக்கும். இத்தகைய மாறுதல்களில், கொள்ளத்தக்கனவற்றைக் கொண்டு தள்ளத்தக்கனவற்றைத்தள்ளி, மொழியின் கட்டுக்கோப்பை-எல்லார்க்கும் பொருள் விளக்கும் தன்மையைக் காப்பதுதான் இலக்கணம்.
பழையன கழிதல்
   தொல்காப்பியர் காலத்தில் இருந்த அழன், புழன், அதோளி, உதோளி முதலிய சொற்களும், பனியத்துக் கொண்டான், வெயிலத்துச் சென்றான், ஆந்தை, பூந்தை முதலிய புணர்ச்சிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே வழக்கொழிந்து விட்டன. அதனால் நன்னூலார் இவற்றை விலக்கினார். இவர் கூறிய நாடுரி, பனாட்டு, வேளியாவன், மண்ஞாத்த, கஃறீது, முஃடீது முதலிய புணர்ச்சிகளும் இன்று இருக்குமிடம் தெரியாமற் போயின, இத்தகைய புணர்ச்சிகளில் அஃறிணை ஒன்று மட்டுமே எப்படியோ உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது.
புதியன புகுதல்
   நான் என்ற தன்மைப் பெயர், ஆல், ஓடு உருபுகள், அன், ஓம் இறுதிநிலைகள் தன்மையில் வருதல், ‘உண்டு’ உயர்திணையில் வருதல் முதலிய புதிய வழக்குகளுக்கு நன்னூலார் இலக்கணத்தில் இடந்தந்து போற்றினார்.
   வினையை அடுத்து படி என்னும் இடைச்சொல்முன் வலி மிகாமை, நீங்கள், தாங்கள் முதலிய பெயர்கள், நடக்கக்கடவன் முதலிய ஏவல் வடிவங்கள் ஆகியவற்றுக்குப் பின் வந்த ஆறுமுக நாவலர் இலக்கணம் செந்தார்.
   அது உருபு உயர்திணையிலும், பன்மையிலும் வருதல், பத்து மூன்று பன்மூன்று என்று புணர்தல் முதலிய பிற்கால வழக்குகளை வை.மு. சடகோபரானமனுசாச்சாரியார் உடன்பட்டார்.
   கற்றடம் என்பதைக் கல் தடம் என்றும், காறடம் என்பதனைக் கால் தடம் என்றும், பிரித்து அச்சிட்டால் எதுகை நயம் அழியும் என்பது கண்டும், பொருள் தெளிவு நோக்கி இக்காலத்து அறிஞர் ஏற்றுக் கொள்கின்றனர்.
   இங்ஙனம் பழையன கழிதல்களும், புதியன புகுதல்களும் தமிழில் இயல்பாக நிகழ்ந்தவண்ணம் உள்ளன. பழையனவற்றை யாரும் வேண்டுமென்றே கழித்ததும் இல்லை; புதியனவற்றை வலிந்து புகுத்தியதும் இல்லை. அவ்வாறு செய்தலும் இயலாது. ஒரு புதிய வழக்காறு தலையெடுக்கும்போது, பழைய மரபுகளில் பழகியவர்கள் அதை ஏற்கத் தயங்குவதும், மற்றவர்கள் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதும் இயல்பே.
வழுவா? புதுமையா?
   மொழியில் புதிய வழக்குகள் புகுவது போலவே வழுவழக்குகளும் முளைக்கின்றன. புதுமை எது? பிழை எது? என்று நோக்கும் தெளிவு வேண்டும். உழவர்கள் களையெடுப்பதைப் போன்று, மொழியறிஞர்கள் பிழை வழக்குகளைக் கண்டபோதே வேரோடு களைந்தெறிய வேண்டும்.
   ‘அணிகொண்டாள்’ என்பதை ‘அழகு செய்து கொண்டாள்’ என்று சொன்னால் புதிய வழக்காகக் கொள்ளலாம். ‘மேக்கப்பிக் கொண்டாள்’ என்பதை எப்படிப் புதுமையாக ஏற்றுக் கொள்வது? நின்றது, போட்டது என்ற சொற்களை ‘நின்றிற்று’ ‘போட்டிற்று’ (எழிலோவியம் 1-10-70) என்று எழுதினால் எப்படிப் புதுமையாக ஏற்றுக் கொள்வது?’’
   ‘கார்க்கதவு ஆங்கிலத்தில் ‘ஆனால்’ என்று சாத்திக்கொண்டது’
   ‘ட்ராப்பிக் சிக்னல் நில் என்று சிவப்பியது’
   ‘சுப்ரபாதம் பூபாளிற்று’
   ‘அவள் விஜயாகைத்தாள்’
   ‘கன்னத்தில் நுரையுடன் ஷேவிக்கொண்டிருந்தார்’’
   ‘அவள் முகாரினாள்’
என்றெல்லாம் எழுதுவது புதுமையா? (மேற்கண்ட ‘புதுமைகள்’ யாவும் அண்மையில் வெளிவந்த தமிழ் இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவை).
‘கற்க கசடற’ என்பதைக் ‘கற்கக் கசடற’ என்று மிகுத்தும் ‘மோப்பக் குழையும்’ ‘அறிவிக்கக் கோரிக்கை’ என்பவற்றை ‘மோப்ப குழையும்’ ‘அறிவிக்க கோரிக்கை’ என இயல்பாகவும் எழுதவேண்டும் என்று புதிய இலக்கணம் படைக்கிறார் முனைவர் தமிழண்ணல். (தினமணி 3-3-90) இவர் கருத்தின்படித் திருக்குறள் போன்ற பழைய இலக்கியங்கள் யாவும் சந்திப் பிழை மலிந்தவை என்றாகும்.
   வழுக்களையெல்லாம் புதுமைகள் என்று கொள்ளும் குருட்டுத்தனத்தால், இன்றைய தமிழில் சில பிழை வழக்குகள் புகுந்து வலுப்பெற்று, புதிய தமிழிலக்கணத்தில் இடம் பிடிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. அவற்றுட்சில:
1.   முப்பத்து மூன்று, நாற்பத்து நான்கு என வர வேண்டிய எண்ணுப் பெயர்கள், ‘முப்பத்தி மூன்று, நாற்பத்தி நான்கு’ என எழுதப்படுகின்றன. இது புதுமை என்றும், இதற்கு இலக்கணத்தில் இடம் தந்து போற்ற வேண்டும் என்றும், ஓர் இலக்கணக் கருத்தரங்கில் கட்டுரை படிக்கப்பட்டது.

2.   ‘சுவற்றில் எழுதாதே’ என்று சுவரெங்கும் எழுதப்படுகிறது. ‘சுவறு’ என்பதைப் புதிய வழக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யும் மொழியறிஞர்கள் இன்று முளைத்துள்ளனர்.

3.   பேரறிஞர், பேராசிரியர், பேரீச்சம்பழம், பெருவழி, பெருவாய்க்கால் என்று பேசுவதும் எழுதுவதும் மரபாயிருக்க, இன்று ‘பெரும் அறிஞர், முப்பெரும்விழா’ என்று எழுதுவது பெருவழக்காகி விட்டது. (தஞ்சைப் பெருவுடையாரை யாரும் துணைக்கு அழைத்து வரவேண்டாம். அது விதிவிலக்கு)

4.   நாடு என்ற வினையடியிலிருந்து நட்டான் முதலிய வினைச் சொற்கள் உருவாவது மரபாயிருக்க, ‘மரம் நட்டினான்’ என்று எழுதப்படுகிறது.

5.   ‘அழு’ வேறு ‘அழுகு’ வேறு. இவற்றிலிருந்து முறையே (குழந்தை) அழுதது என்றும், (பழம்) அழுகியது என்றும் சொற்கள் பிறக்கும். ஆனால் இன்று ‘அழுகாதே பாப்பா’ என்னும் வழக்குப் பரவி வருகிறது.

6.   தொக்கு (நிற்கிறது) என்பது பழைய வழக்காகிப் போய்த் ‘தொக்கி’ (நிற்கிறது) என்ற புதிய வழக்குப் பூத்துள்ளது. (இப்படியே சென்றால் இன்னும் சில காலத்தில் மிக்கு வந்தது என்பதுகூட ‘மிக்கி வந்தது’ என்று ஆகலாம்) ‘தொக்கி’ என்ற வழக்குக் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் இடம் பெற்றுவிட்டது. ‘தொக்கு’ என்பதற்கு அதில் மாங்காய் ஊறுகாய் என்ற பொருள் மட்டுமே உள்ளது.

7.   அதைச் செய்வது இதைப் பொறுத்தது என்பது போன்ற பொருளில், பொறுத்தது என்பது ‘பொருத்தது’ என்று இடையின ருகரம் இட்டு எழுதப்படுகிறது. விளைவாக மேற்படி அகராதியில், ‘பொருத்தது’, ‘பொறுத்து’ ஆகிய இருவடிவங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

8.   நாட்டுச் சிறப்பு, நாட்டுவளம், நாட்டாட்சி என்பது மரபாயிருக்க, ‘தமிழ்நாடு அரசு’ என்று எழுதப்படுகிறது. (இதற்குத் ‘தமிழை நாடும் அரசு’ என்பது பொருள்.)

9.   நடைப்பாவாடை, நடைக்குதிரை என்பன மரபாயிருக்க ‘நடைபாதை’ என்னும் வழக்கு வலுத்து வருகிறது.

10.  கைகால் என்றோ கையும் காலும் என்றோ எழுதும் மரபுகள் இருக்கவும், ‘கை மற்றும் கால்’ என்று எழுதும் புத்தம் புதிய முறை பூத்துள்ளது. (ஆங்கிலம் படித்தவர்கள் and என்பதை மொழி பெயர்த்துப் புகுத்திய புதுமை இது) ‘மோரும் சோறும்’ என்பதை ‘மோர் மற்றும் சோறு’ என்றும் ‘சேர சோழ பாண்டியர்’ என்பதைச் ‘சேரன், சோழன், மற்றும் பாண்டியன்’ என்றும் சொல்லிப் பாருங்கள். அவை தமிழாய் இல்லை என்பது தெரியும். இக்கால வழக்கின் விளைவாக மேற்குறித்த அகராதியில் இதற்கு, a word used as aconjunction என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

11.  சங்க இலக்கியங்களில் ‘அறுகை’ என வழங்கிய ‘அறுகு’ என்ற புல்வகை, அறுகம்புல் என்று இன்றும் ஏராளமான இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. இக்காலத்தில் பலர் இதனை ‘அருகு’, ‘அருகம்புல்’ என இடையின ருகரம் இட்டு எழுதுவதனாற்போலும், மேற்படி அகராதியில், அருகு, அருகம்புல் என்ற வடிவங்களுக்கு இடம் கிடைத்து விட்டது.

12.  ‘அரைஞாண்’ என்ற சொல், ‘அண்ணாக் கயிறு’ என்றும் ‘அரணாக் கவுறு’ உலக வழக்கில் உள்ளது. சிலர் இப்படியே எழுதுவதனால் மேற்குறித்த அகராதியில் ‘அருணாக் கயிறு’ என்ற வடிவமும் இடம் பெற்றுள்ளது.

13.   ஏற்கெனவே தன்னிடம் இருந்த ஒன்றை ஒருவன் இழக்காமல் நிலை நிறுத்திக் கொள்ளும் செயலைத் ‘தக்கவைத்துக் கொள்ளுதல்’ என்று கூறுவதை இன்று வானொலி தொலைக்காட்சிகளில் கேட்கிறோம், இதழ்களில் காண்கிறோம். தங்க வைத்தல் என்றோ நிலை நிறுத்திக் கொள்ளுதல் என்றோ இதைச் சொல்லலாம். சற்று முந்திய இலக்கியங்களிலும் அகராதிகளிலும் தக்கவைத்தலைக் காண முடியாது. தற்கால அகராதியில் இவ்வடிவத்திற்கு to retain (a seat, a little etc…) என்ற பொருள் தரப்பட்டுள்ளது.

14.  அருகாமை என்பது பிழை என்றும் அருகண்மை என்பது அதன் திருத்தமான வடிவம் என்றும் பாவாணர் கூறுகிறார் (கட்டுரை வரைவியல், பதிப்பு 1952, ப.43) தற்கால அகராதியில் அருகாமை என்பது அண்மை என்ற பொருளுடன் வீற்றிருக்கிறது.
15.  புதுவைத் தாகூர் (கலைக்கல்லூரி), நெல்லைப் பாவேந்தர் (கழகம்), கோவைப் பாவாணர் (மன்றம்) என்றெழுதும் மரபிருக்க, ‘மதுரை காமராசர்’ (பல்கலைக்கழகம்) என்று ஒற்று மிகுக்காமல் எழுதப படுகிறது.

16.  ஈருடல், ஓருடல் என்றெழுதுவது இனிய மரபாயிருக்க, ‘இரு உடல்’ ஒரு உயர் என்று இன்று எழுதப்படுகிறது; படிக்கப்படுகிறது.

17.  மீ + இயல் = மீயியல் என்பது புணர்ச்சி மரபாயிருக்கவும் (நன். 162) ‘மீவியல்’ என்ற வடிவம் பல்கலைக் கழக ஆய்வேடுகளிலும் காணப்படுகிறது.
   வடிவ மாற்றம் மட்டும் இன்றி, மரபுக்கு மாறாகப் பொருள் மாற்றம் பெற்று வழக்கு வலிமை பெற்றுவிட்ட சில சொற்களையும் இங்கு எடுத்துக் காட்டுதல் பொருத்தமாகயிருக்கும். அவை வருமாறு;
துப்புரவு
நுகர்ச்சி, நுகர் பொருள் என்ற பொருள்களில் இது இலக்கியங்களில் வருகிறது. தூய்மை, முழுமை என்ற பொருள்களில் பிற்காலத்தில் ஆளப்பட்டது, பழைய பொருள்களை இன்று இழந்து நிற்கிறது. தற்காலத் தமிழகராதியில் இதற்கு நுகர்ச்சி என்ற பொருளே தரப்பட்டவில்லை.
அணைத்தல்
தழுவுதல் என்பது இதன் பொருள். இன்று அவித்தல் என்ற பொருளில் ஆளப்படுகிறது. நாட்டுப்புறத்தில் ‘நெருப்பை அணைத்தார்கள்’ என்று சொல்லாமாட்டார்கள். ‘நெருப்பை அவித்தார்கள்’ என்று தான் சொல்லுவார்கள். நகரத்திலோ ஏராளமான ‘தீ அணைப்பு நிலையங்கள்’ உள்ளன.

கண்ணோட்டம்
இதற்குக் கண்பார்வை என்ற பொருள் இலக்கியங்களில் எங்கும் இல்லை. இரக்கம், தாட்சணியம் என்ற பொருள்களே உண்டு. தற்கால அகராதியில் இப்பொருள்களே தரப்படவில்லை. Point of view என்ற பொருள் மட்டுமே உள்ளது.
கேள்வி
இதுவும் வினா என்ற பொருளில் பழைய இலக்கியங்களில் வரவில்லை. காதால் கேட்பதையே குறிக்கும். இன்று வினா என்ற பொருளிலும் இது வழங்கப்படுகிறது.
குறிப்பாக
வெளிப்படையாக என்பதற்கு எதிர் மொழி ‘குறிப்பாக’ என்பது, இதுவே இலக்கிய வழக்கு. இன்றோ, மிகவும் வெளிப்படையாகச் சொல்வதற்கே இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தற்கால அகராதி இதற்கு, particularly என்ற பொருளையும் தருகிறது.
தூங்குதல்
இதன் மிகப் பழைய பொருள் தொங்குதல், காலம் கடத்தில் என்பன. இதன் இன்றைய பொருள் உறங்குதல் மட்டுமே.
நாளடைவில் சொற்களின் பழைய பொருள்களோடு புதிய பொருள்கள் சேர்வதும், அவை பழைய பொருள்களை விட்டுப் புதிய பொருள்களைப் பற்றுவதும் இயல்பே. பேச்சு வழக்கில் ஏற்படும் மாறுதல்கள் மெல்ல எழுத்து வழக்கில் இடம் பெறுவதும் இயல்பே. எனினும், இயல்பாக அன்றி, மொழி மரபை அறியாமையாலும், போதிய மொழித்திறன் இல்லாமையாலும் எழுத்தாளர்கள் சிலர் மொழியில் பல பிழை வழக்குகளை விரைவாகப் பெருக்கி வேரூன்றச் செய்து விடுகிறார்கள் என்பதே வேதனைக்குரியதாய் விளங்குகிறது.
இன்று, அதுகள், இதுகள், சிலது, பலது, அருவெறுப்பு என்றெல்லாம் கூசாமல் எழுதிவரும் ‘பெரிய’ எழுத்தாளர்களின் செல்வாக்கு, மொழியின் கட்டுக் கோப்பைச் சிதைக்கிறது என்பதே இங்கு நான் எடுத்துக் காட்டுவது
காரணங்கள்
   இப்படியெல்லாம் எழுதப் படுவதற்குக் காரணமாக
1.   தமிழ்க் கல்வியில் உள்ள குறைபாடு

2.   கற்றுவல்லோர் இவை பற்றிக் கவலைப் படாமை என இரண்டைச் சிறப்பாகக் குறிக்கலாம்.
    I. கல்வி முறையில் உள்ள குறை: இதுபற்றிய விளக்கத்தை இந்நூலின் முதற் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

   II. கற்றறிந்தோர் கவலைப்படாமை: இலக்கணத்தை ஆராய்ந்து கட்டுரை எழுதும் ஆராய்ச்சியறிஞர் ஒருவர், ‘’புணரியற் பயிற்சியே வீங்கிய தமிழறிவு எனப் பீடு பேசுகின்றார்கள் தமிழ்ப்பண்டிதர்கள்’’ என்றும் ‘’ இலக்கணப் புலவர்கள் புணர்ச்சி விதிகளைப் போற்றுவதுதான் வலிமிகல் போன்றவற்றிற்குக் காரணம்’’ என்றும் கருத்துக் கூறுகின்றார். அவர் கூறும் கருத்துகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. மொழியைப் பற்றி ஆராய்ந்தெழுதும் இவரது மொழித்திறன் எண்ணி இரங்கத்தக்கதாக உள்ளது. உயிரீற்றுக்கு என்று எழுதவேண்டிய இடங்களிலெல்லாம் ‘உயிரீறுக்கு’ என்று எழுதுகிறார். படிக்காதவர்கூட, ‘ஆறுக்குப் போகிறேன்’ என்று சொல்லமாட்டார்கள். ‘ஆற்றுக்குப் போகிறேன்’ என்று ஒற்று இரட்டித்தான் மரபு பிறழாமல் பேசுவார்கள். நான் ‘கற்றறிந்தவர்கள்’ என்று குறிப்பிடுவது இவர்களையன்று. நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்ய வல்ல மொழி மருத்துவர்கள் நாடெங்கும் ஆங்கு ஈங்காக இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் பலர் இக்கால இலக்கியங்களாகிய சிறுகதை, புதினம் முதவியவற்றினின்றும் ஒதுங்கியே வாழ்கிறார்கள். பள்ளிப் பாடநூல்கள்கூட இவர்கள் பார்வையிற் படுவது அரிது. ஓரிரு பிழைகளைக் காண நேர்ந்தாலும், நாம் சொன்னால் இவர்கள் கேட்கவா போகிறார்கள்? என்று எண்ணிச் சும்மா இருந்து விடுகிறார்கள். இவர்கள் தப்பித்தவறி ஏதாவது எழுதினால்கூட அவற்றை இலக்கியத் திங்கள்இதழ்களுக்கே அனுப்புகிறார்கள். அவ்விதழ்கள் இக்கால எழுத்தாளர்களின் கண்ணில்கூட்டப் படும் வாய்ப்பில்லை. (மொழி பற்றிய கருத்துகளைப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லும் சீரிய தமிழ்த் தொண்டினைத் தினமணி ஒன்று மட்டுமே செய்து வருகிறது) எப்படியோ, கற்றுவல்ல சான்றோர்ள் இன்றைய தமிழ் வெளியீடுகளைப் பார்க்கவேண்டும், பிழை வழக்குகளை எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இன்று இடம்பெறும் பிழைகள் தொடர்நது வாழ்ந்து வருமானால் அவையே நாளை புதிய வழக்குகளாகப் போற்றப்படக்கூடும். இது வரலாற்று உண்மை.

   கடிசொல் இல்லைக் காலத்துப் படினே
                                        (தொல். சொல், 452)
என்ற நூற்பா உரையில் சேனாவரையர் ‘இன்ன அனு மதிக்கும் காலமாம் அக்காலத்து அவை வழு அன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடன்னபாடு ஆகலின் அதனைத் தழுவிக் கொண்டவாறு என்க’ என்று கூறுவது காண்க. சகரம் மொழிமுதல் வருவது தமிழியல்பு இல்லை. அதனால் சம்பு, சள்ளை, சுட்டி என வருவன வழுவே. இவை அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைத்த வாழ்வு பெறுங்காரத்தின் வழுவல்ல என்று அனைவரும் உடன்படுவர் என்பது இதன் கருத்து. காட்டாக, இருவர் தலைவர், எழுவர் மகளிர் என்று எழுதிய காரத்தில் இரண்டு தலைவர், ஏழு மகளிர் என்று எழுதினால் வழு யான் அல்லேன், அஃது அன்று என்று எழுதியபோது நான் அல்ல, அது அல்ல என்று எழுதுவது பெரும்பிழை. நின் அன்பர், என கைகள் என்று எழுதிய காலத்தில் நினது அன்பர், எனது கைகள் என்று எழுதுவதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இன்று இவ்வழு வழக்குகள் களையுநர் கைகொள்ளும் அளவுக்குக் காழ்த்து விட்டன. அதனால், இரண்டு தலைவர், எழு மகளிர், நான் அல்ல, நினது அன்பர், எனது கைகள் என்பன எல்லார்க்கும் வழுவற்றவை போலக் காட்சியளிக்கின்றன.
‘’நம்மைச் சுற்றிலும் அறிவியல் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றபடி நாம் சென்றாக வேண்டும், இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது பிற்போக்குத்தனம்’’ என்று அறிவியற் பூச்சாண்டி காட்டுகின்றனர் சிலர். உண்மையான அறிவியலறிஞர்கள் இப்படிச் சொல்லவதில்லை. அறிவியல் முன்னேற்றத்தின் விரைவுக் கேற்றபடி கலைச்சொற்களைப் படைத்துக் கொள்ளலாம், அல்லது மொழி பெயர்த்துக் கொள்ளலாம், அல்லது இவையிரண்டுமே அறிவியல் விரைவுக்கு ஈடு கொடுக்காவிட்டால், உடனடித் தேவைக்குப் பிறமொழிச் சொற்களைக்கூட அப்படியே எடுத்தாளலாம். மொழிச் சிக்கல் அறிவியல் வளர்ச்சி சிறிதும் தடைப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் கலைச் சொல்லாக்கம் வேறு; மொழியின் கட்டுக்கோப்புச் சிதையாமல் காப்பது வேறு. They Come என்பது போல இல்லாமல், He Comes என்பதில் தேவை இல்லாமல் சேர்ந்து வரும் S என்ற எழுத்தையும் விடாமல் இழுத்துக் கொண்டு தான் முன்னேறிக் கொண்டிருக்கிறது ஆங்கில அமெரிக்கர்களின் அறிவியல் என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அறிவியலைக் காட்டி மொழியைச் சிதைப்பதைப் பொறுப்புள்ள அறிவியலறிஞர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அறிவியலும் வளரவேண்டும், மொழியும் வளரவேண்டும். ஒன்றன் அழிவில் மற்றொன்றன் ஆக்கம் என்பது அறிவுக் குழப்பத்தின் அடையாளம்.
குற்றம் கூறுவது சரியா?
   நக்கீரர் சிவனிடத்திலேயே குற்றங்கண்டார் என்றும், சீத்தலைச் சாத்தனார் குற்றங் கண்டபோதெல்லாம் எழுத்தாணியால் தம் தலையில் குத்திக் கொண்டார் என்றும், பிள்ளைப் பாண்டியன் பிழை செய்வார் தலையில் குட்டினான் என்றும், வில்லிபுத்தூரார் குற்றமிழைப்பார் காதை அறுத்தார் என்றும், ஒட்டக்கூத்தர் அத்தகையோர் முடியைக் களைந்தார் என்றும், நம்மிடம் பழங்கதைகள் பல உள்ளன. அவை நம் முன்னோர்தம் மொழிக்காப்பு முயற்சிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த நூற்றாண்டிலும் மறைமலையடிகள், பாவாணர், பாவேந்தர் முதலிய பலர் இவ்வொறுப்புச் செயலைச் செய்து வந்திருக்கிறார்கள். ‘பிறர்க்கென முயலுநர் உண்மையானே உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்ப்பது போல, இவர்களெல்லாம் ‘எக்கேடாவது கெட்டுப் போகட்டும்’ என்று இருந்திருந்தால், தமிழ் எப்போதோ செம்மை குன்றிச் சீரழிந்து போயிருக்கும்.
   மறைமலையடிகள் அயல்மொழிக் கலப்பை முழு மூச்சாக எதிர்த்ததால்தான், 50 ஆண்டுகளுக்கு முன் ‘நமஸ்காரம்’ போட்டுக் கொண்டிருந்த நம்மவர் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்து வரும் தமிழறியார்கூட இன்று ‘வணக்கம்’ என்று சொல்லும் நிலை வந்துள்ளது.
   பாவாணர், ‘இலக்கண அறிவும் உணர்ச்சியும் இல்லாத சில தான்தோன்றிகள், இக்கலத்தில் லகர ளகர மெய்கட்குப் பின் வலி மிகுத்து, கல்க்கிறான், பால்க்குடம், கேள்க்கிறோம், தூள்ப்பாக்கு என எழுதுகின்றனர். இதை ஆசிரியர் வலிபெறக் கண்டித்து அறவே ஒழிப்பார்களாக. பாற்குடம், வாட்போர் என்பவற்றைப் பால்குடம், வாள்போர் என எழுதினும் பெருங்குற்றமில்லை. கற்கிறான், கேட்கிறோம் என்பவற்றைக் கல்க்கிறான், கேள்க்கிறோம் என எழுதுவது தமிழைக் கெடுக்க்கும் கழிபெருங் குற்றமாகும்’ என்றும், பாவேந்தர்,
‘’வாட்டடங்கண் கற்றரையை வாள்த்தடங்கண்
கல்த்தரைஎன்று எழுதி முன்னைப்
பாட்டினிலே பெரும்பிழையைப் பல்குவிப்பா
னுக்குமணிப் பண்டித தர்கள்
சாட்டைக்கொடுத்து அறிக்கைவிடத் தாள்ஒன்றும்
அற்றதுவே தமக்குச் சோறு
போட்டிடுவார் ஒப்புகிலார் எனும்கருத்தோ
மானமற்ற போக்குத் தானோ?’’
                                                            (தமிழியக்கம்)
என்றும் கண்டித்ததால்தான், ல்த், ல்ப், என்ற புணர்ச்சி முறை தலையெடுக்கவில்லை.
   மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள், எழுத்துக்கள், நாட்கள், நூற்கள் என்று எழுதுவது சரியன்று என்றும், எழுத்துகள், நாள்கள், நூல்கள் என்று எழுதுதல் வேண்டும் என்று விளக்கியதால்தான் இன்று பலர் இவ்வாறு எழுதுகிறார்கள்.
   வரதட்சிணை, தீண்டாமை ஆகிய கொடுமைகள் நீண்ட நெடுங்காலமாகவே கண்டிக்கப்பட்டுத்தான் வருகின்றன என்றாலும் அவை ஒழிந்தபாடில்லை. கண்டிப்பதால் பயனில்லை என்று பாவலர்களும், எழுத்தாளர்களர்களும், மக்கள் பணியாளர்களும் விட்டுவிடவில்லை, இன்றும் இவற்றை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
   சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கப்படவேண்டும் என்று அறிவியலறிஞர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் மதிக்கவில்லையே என்று சோர்ந்துவிடவில்லை. இடைவிடாமல் அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
   போர் ஒழியவேண்டும் என்று அமைதிக்குப் பாடுபடும் சான்றோர் பெருமக்கள் பல்லாண்டுகளாகப் பாடாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தும், உலகில் எங்காவது ஒரு மூலையில் போர் எப்போதும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை. அமைதிப் பணிகள் தொடர்கின்றன.
   அனால் மொழியறிஞர்கள் மட்டும் மொழிச் சிதைவுகளைத் தடுக்க முன்வருவதில்லை. சிலர், யார் எப்படி எழுதினால் நமக்கென்ன என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, வரம்பழிவுகள் வாழ்வு பெற்றபிறகு ‘’இது பெரும்பாலோர் வழக்காகி விட்டது. இதனைப் புதுமை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள். இப்படிச் சொன்னால் தம்மைப் புதுமை விரும்பி என்று புகழ்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும்.
பெரும்பாலோர் பெருக்கும் பிழைகளைச் சிலர் திருத்துவதால் பயன் விளையுமா?
   எவ்வளவு சிறிய செயல் ஆனாலும் விளைவு உறுதியாக உண்டு. நீரோட்டத்தில் நிற்கும் சிறு புல்கூட, அதன் பெருக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டாலும், ஓட்டத்தின் விரைவை ஓரளவாவது குறைக்கத்தான் செய்யும், ‘’தெருவில் விளையாடாதே’’ என்று பெற்றோர் எவ்வளவு கண்டித்தாலும் சிறுவர்கள் கேட்பதில்லை. அதனால் ‘எப்படியாவது ஒழிந்து போகட்டும்’ என்று எந்தப் பெற்றோரும் விட்டுவிடுவதில்லை. தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் பெற்றோர்க்குத் தெரியாமல் விளையாடும் அளவுக்கு அவர்களிடம் ஓர் அச்ச உணர்வாவது உண்டாகிறது. இப்படிக் கண்டிக்காவிட்டால், தெருவில் விளாயாடுவதைப் பெற்றோர் உடன்படுவதாக அவர்கள் நினைக்கக்கூடும். கண்டித்தால் கேட்கவா போகிறார்கள் என்று விட்டுவிடும் பெற்றோர், பொறுப்பற்றவர்களாகத்தான் இருக்க முடியும். மொழியில் இழைக்கும் பிழைகளை அவ்வப்போது எடுத்துக் காட்டிக் கண்டிப்பதால், குறைந்த அளவு, குற்றம் இழைப்பதில் அச்ச உணர்வாவது பரவுகிறது. அவ்வுணர்வு மொழியின் கட்டுக்கோப்பைக் காக்கிறது.
   யான் என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், மொழியில் பிழை கண்டபோதெல்லாம் எடுத்துக்காட்டத் தயங்கியதில்லை. ‘’குறை சொல்வதே தொழிலாகத் திரிகிறான்’’ என்று யான் இகழப்படுவதுண்டு. ‘’என்ன? இன்றைக்கு யாருக்குக் குற்றச்சாட்டுக் கடிதம்?’’ என்று நண்பர்கள் என்னை ஏளனம் செய்வதுண்டு. இதற்கெல்லாம் நான் வருத்தப்படுவதில்லை; மாறாகப் பெருமைப்படுகிறேன். தன் ஒருவருடைய தனிப்பட்ட குற்றம் குறைகளைத் தூற்றக்கூடாது. ஆனால், பொது அமைப்புக் கெடும்படி ஒருவர் செய்யும் குற்றங்களை எடுத்துக்காட்டித் திருத்தியே தீர வேண்டும். மொழி ஒரு பொது அமைப்பு. அதன் இயல்பைக் கெடுப்பவர்களைக் குற்றம் சாட்டுவது, சட்டத்தை மீறுவோரைக் காவல்துறை குற்றம் சாட்டுவது போன்றது.
   சாலை நெறிமுறைகளை மீறுவோரைத் தடுப்பதற்குக் காவலர்கள் இருக்கிறார்கள்; தண்டிப்பதற்குச் சட்டம் இருக்கிறது. ஆனால் மொழியின் ஒழுங்கை மீறுவோரைத் தடுப்பதற்கென்று யாரும் இல்லை. தண்டிப்பதற்கும் யாருமில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை உள்ளது.
   எனவே, மொழியில் யார் எங்கே என்ன பிழை செய்தாலும், விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்துக் காட்டித் திருத்துவது கற்றுவல்ல சான்றோர்தம் கடமையாகும்.
‘’தமிழ் மொழியில் யார் எதைச் செய்தபோதிலும் கேள்விமுறை இல்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்கு வந்தவாறும் எழுதுகின்றனர், பேசுகின்றனர். தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளுவதும் வேண்டும்’’
-    பரிதிமாற் கலைஞர்
‘’தமிழ் மக்கள் தம் மொழியைக் கொலை செய்வதில் பேரும் புகழும் பெற்றவர்கள் என்று கூறலாம்’’

-    திரு. வி.க

No comments:

Post a Comment